அண்மைய ஈரமான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு உங்கள் குடைகளை உங்களுக்கு அருகில் வைத்திருங்கள்.
நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்படுவதால், பெரும்பாலான நாள்களில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவி்த்திருக்கிறது.
மழை பிற்பகலில் தொடங்கும். அது சில நாள்களில் இரவு வரை நீடிக்கும். தீவின் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப் பொழிவு சராசரிக்கும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வகம் எதிர்பார்க்கிறது.
தினசரி அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில நாள்களில் அது அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
சில மழை நாள்களில், 23 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
மாதத்தின் முதல் பாதி ஈரமாக இருந்தது. பெரும்பாலான நாள்களில் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் காலை மற்றும் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்தது.
நவம்பர் 11 அன்று, காற்றின் வட்டார ஒருங்கிணைப்பு சிங்கப்பூரில் கடுமையான மழைக்கு வழிவகுத்தது. பாசிர் ரிஸ்ஸில் 73.2 மிமீ மழை பதிவானது. இது நவம்பர் முதல் இரண்டு வாரங்களில் பதிவான அதிகபட்ச அளவாகும்.