சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்குக் கனமழை பெய்தது.
அன்று இடியுடன் கனமழை பெய்ததில் சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
காலை 8.15 மணியிலிருந்து பிற்பகல் 1.50 மணி வரை, சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் ஏறத்தாழ 134.8 மில்லிமீட்டர் அளவிலான மழை பதிவானதாக கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை இரவு பதிவிட்டது.
இது ஒவ்வோர் அக்டோபர் மாதத்தின் சராசரி மழை அளவில் 80 விழுக்காடு என்று கழகம் கூறியது.
1991ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை அக்டோபர் மாதத்தில் சராசரியாக 168.3 மில்லிமீட்டர் மழை பதிவாகும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்தது.
அக்டோபர் 14ஆம் தேதியன்று இடியுடன் கனமழை பெய்ததில் தெம்பனிஸ், புக்கிட் தீமா உட்பட பல வட்டாரங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, அவற்றில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.
புக்கிட் தீமாவில் உள்ள டனர்ன் சாலை, சன்செட் வே குடியிருப்புப் பேட்டை, பிடோக்கில் உள்ள சில பகுதிகள், மவுண்ட்பேட்டன் சாலையில் உள்ள ஜாலான் சீவியூ உட்பட 15 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கழகம் கூறியது.

