அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழையையும் இரவு நேரத்தில் வெப்பமான, ஈரப்பதத்துடன் கூடிய வானிலையயும் எதிர்பார்க்கலாம்.
எனினும், கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில், மே மாதக் கடைசி வாரத்தில் அது குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை (மே 16) தெரிவித்தது.
பெரும்பாலான நாள்களில் தீவின் பல பகுதிகளில் காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில நாள் காலைகளில், பரவலாக கனமழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலமே இதற்குக் காரணம். இந்தப் பருவநிலை பொதுவாக செப்டம்பர் வரை நீடிக்கும்.
சில நாள்களில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கிலிருந்து வரும் காற்று, கடலிலிருந்து வெப்பமான, ஈரப்பதமான காற்றை நிலத்தின்மீது கொண்டு வருவதே இதற்குக் காரணம்.
பகல் நேரத்தில் வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை. பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
சில நாள்களில், வானத்தில் குறைவான மேகங்கள் தவழும்போது வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை எட்டக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை (மே 14) சுவா சூ காங்கில் அதிகபட்ச அன்றாட வெப்பநிலையாக 36.1 டிகிரி செல்சியஸ் பதிவானது.

