இளையர் நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான வயது உச்சவரம்பை அதிகரிக்க வழிவிடும் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படவிருந்தது.
இப்போது அந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிறார், இளையர் சட்டத்தில் (CYPA) சம்பந்தப்பட்ட திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி அறிவித்திருந்தது. இப்போது அந்நடவடிக்கை அதற்கு சில காலம் கழித்து அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16லிருந்து 18 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் மீது இளையர் நீதிமன்றங்களில் விசாரணை நடத்த வகைசெய்ய கடந்த 2019ஆம் ஆண்டு சிறார், இளையர் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதிக வயதான இளம் குற்றவாளிகளுக்கும் மறுவாழ்வு ஆதரவு வழங்குவது அதன் நோக்கமாகும்.
தற்போது இளையர் நீதிமன்றங்களில் 16 வயதுக்கு உட்பட்ட இளம் குற்றவாளிகள் மீதுதான் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 அல்லது அதற்கும் அதிக வயதான இளையர்கள் மீது அரசு நீதிமன்றங்கள் அல்லது சமூக நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவியல் நீதி முறையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் இதற்கு விதிவிலக்கு.
சில மோசமான குற்றங்களைப் புரிந்த இளம் குற்றவாளிகளைக் கையாள்வதன் தொடர்பில் சட்டத் திருத்தத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றன; தானும் உள்துறை அமைச்சும் அடுத்த ஆண்டு மேலும் தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டது.