சிங்கப்பூரின் ஆகப் பெரிய இரு சட்ட நிறுவனங்கள் சீனாவில் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவிருக்கின்றன.
சீனாவில் முன்பு தளம் கொண்டிருந்த உலகின் பெரிய சட்ட நிறுவனங்கள் இப்போது அந்நாட்டிலிருந்து தங்கள் அலுவலகங்களை மீட்டுக்கொண்டு வரும் வேளையில், சீன நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கிக்கொள்ளும் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.
அந்த வகையில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்றான ‘ராஜா அண்ட் டான் ஏஷியா’, பத்து வழக்கறிஞர்களைக் கொண்ட பிரிதிநிதித்துவ அலுவலகத்தை சீனாவின் ஷென்ஸென் மாநிலத்தில் உள்ள சியன்ஹாய் நகரில் 2024 அக்டோபர் மாதத்தில் திறக்கவுள்ளது என்று ஷென்ஸென் அலுவலகத்தின் தலைவர் ஹியூ கியான் ஹியோங் தொலைபேசி வழி தெரிவித்தார் என்று புளூம்பர்க் செய்தி கூறுகிறது.
சீனாவின் தொழில்நுட்ப நடுவமாகத் திகழும் ஷென்ஸெனில் உள்ள அலுவலகம் அனைத்துலக சமரசம், கட்டுமானம், தொழில்நுட்பம், ஊடகம், தொலைத்தொடர்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
ஏற்கெனவே செயல்படும் ஷங்காய் அலுவலகத்துடன் இது சீனாவில் இயங்கும் இரண்டாம் அலுவலகமாகும்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய சட்ட நிறுவனங்களில் மற்றொன்றான எலன் அண்ட் கிலட்ஹில்லும் சீனாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஷங்காயில் ஓர் அலுவலகத்தை இவ்வாண்டு ஜனவரியில் திறந்துள்ளது.
அதன் மூலம் தென்கிழக்காசியாவில் நிலவும் சட்டம் மற்றும் வர்த்தக நிலவரத்தை சீன நிறுவனங்களுக்கு விளக்கும் பொறுப்பையும் அது ஏற்றுக்கொண்டுள்ளது.
உலகமயமாதலுக்கு, சீன நிறுவனங்கள் சிங்கப்பூரை இவ்வட்டாரத்தின் நடுவமாகக் கருதுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலும் ஹாங்காங்கிலும் உள்ள தங்கள் நிறுவனங்களை மீட்டுக்கொண்டுள்ள வேளையில், ராஜா அண்ட் டான் ஏஷியா, எலன் அண்ட் கிலட்ஹில் போன்ற பெரிய சட்ட நிறுவனங்கள் தங்கள் சட்ட அலுவலகங்களை தங்கள் நிலங்களில் அமைத்திருப்பதை பெய்ஜிங் வரவேற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2019ல் சீனாவில் செயல்பட்ட வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 225 ஆக இருந்தது. அது 2022ல் 205 ஆகக் குறைந்தது என்று சீனாவின் நீதி அமைச்சின் இணையப் பக்கத்தை மேற்கோள் காட்டி புளூம்பர்க் தகவல் வெளியிட்டுள்ளது.