தாதிமைத் துறையில் இளையருக்கு முழுநிறைவு

2 mins read
b04e69b6-e073-4754-8a01-f2f07883f610
தாதி உடையில் ராஜேந்திரன் ராஜேஷ். - படம்: எம்ஓஎச் ஹோல்டிங்ஸ்

‘ஜிசிஇ’ சாதாரண நிலை தேர்வில் நான்கு புள்ளிகளுடன் நல்ல தேர்ச்சி பெற்ற ராஜேந்திரன் ராஜேஷ், சிங்கப்பூரின் சிறந்த தொடக்கக் கல்லூரிகளில் ஒன்றான விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் சேர முடிவு செய்திருந்தார்.

16 வயதில் தம் எதிர்காலம் குறித்த பெரிய முடிவை எடுக்கவேண்டிய நேரத்தில் தாதிமைத் தொழிலுக்கான தகுதிப் புள்ளிகளைப் பார்த்ததை ராஜேஷ் நினைவுகூர்ந்தார். 

‘‘சராசரியான தேர்ச்சி உள்ளவர்களுமே இதற்குத் தகுதிபெற முடிந்தது. எனவே அதில் போட்டித்தன்மை இருக்காது என நினைத்திருந்தேன்,’’ என்று ராஜேஷ் கூறினார். 

ஆனால் சில ஆண்டுகளில் இவர், தாதிமைத்துறையைத் தெரிவு செய்தார். 

விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் பயின்று மேல்நிலைத் தேர்வை எழுதி முடித்த பின்னர், தேசிய சேவையில் போர்க்கால மருத்துவ உதவியாளராகப் பயிற்சி பெற்றார். 

“எனக்கு அந்த அனுபவம் பிடித்திருந்தது. எனவே, தாதிமையைத் தேர்ந்தெடுப்பது குறித்து யோசிக்கும்படி முழுநேரச் சேவையாளர்கள் பரிந்துரைத்தனர்,” என்று ராஜேஷ் கூறினார். 

சிங்ஹெல்த் அமைப்பின் பொது வரவேற்பு நாளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் தாதிமையைப் பற்றிய அவரது புரிதலை ஆழப்படுத்தியது.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 2020ல் சேர்ந்த ராஜேஷ், நான்கிற்கு நான்கு ஜிபிஏ புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி அடைந்தார். 

சிங்கப்பூரின் பொதுச் சுகாதார நிறுவனங்கள் சார்ந்துள்ள ‘எம்ஓஎச் ஹோல்டிஸ்’ அமைப்பு, அவருக்கு வெளிநாட்டில் தாதிமை படிப்பதற்கான உபகாரச் சம்பளத்தை வழங்கியது.

2024ல் ராஜேந்திரன் ராஜேஷ், தாதிமை இளநிலைக் கல்வியைப் பயின்று பட்டம் பெற்றார். 
2024ல் ராஜேந்திரன் ராஜேஷ், தாதிமை இளநிலைக் கல்வியைப் பயின்று பட்டம் பெற்றார்.  - படம்: ராஜேந்திரன் ராஜேஷ்

பிரிட்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் தாதிமைத் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு பயின்ற ராஜேஷ், 2024ல் முதல்தர தேர்ச்சியுடன் பட்டம் பெற்றார்.

சிங்கப்பூர் இதய நிலையத்தில் கடந்த பத்து மாதங்களாகப் பணிபுரியும் ராஜேஷ், தூதராகவும் உள்ளார்.

தாதிமை என்பது நோயாளிகளைப் படுக்கைக்குப் பக்கவாட்டில் இருந்து பராமரிப்பதோ மருத்துவர்கள் சொல்வதைப் பின்பற்றுவதோ அல்ல என ராஜேஷ் தெரிவிக்க விரும்புகிறார். 

தனிமனிதர்கள்முதல் சுகாதாரக் கட்டமைப்புவரை, திறமையான தாதியர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார்.

அறுவை சிகிச்சைக் கூடத்தில் தாதியர் அங்குமிங்கும் அவசரமாகச் செயல்படுவதை, மருத்துவத்தைப் பற்றிய தொலைக்காட்சி நாடகங்கள் காண்பிப்பது பற்றியும் ராஜேஷ் பேசினார். 

கல்வி, ஆய்வு ஆகியவற்றிலும் தாதியர் ஈடுபட்டு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை இத்தகைய நாடகங்கள் பொதுவாகச் சித்திரிப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நடப்பு விவகாரங்களில் நாட்டமுள்ள ராஜேஷ், அன்றாடம் செய்தி படிப்பார். சுகாதாரத் துறையில் நடந்துவரும் மாற்றங்களைக் கவனித்து அதனையொட்டிய தம் சிந்தனையைப் பெருக்க முயல்வார். இளைப்பாறலுக்காக நண்பர்களுடன் வெளியே செல்வார்; தனியாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதும் உண்டு.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) கொண்டாடப்படும் தாதியர் தினத்தையொட்டி சக தாதியருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறிய ராஜேஷ், தாதிமைத் துறையில் பல்வேறு நிபுணத்துவங்களும் பிரிவுகளும் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறார்.

நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில் தாதியர் திறமை உள்ளவர்கள் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்