புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்துவரும் முஸ்லிம் அன்பர்கள் பலர் பள்ளிவாசல் சென்று, மனமுருகி இறைவனைத் தொழுகின்றனர்.
எளிமையான சஹர் காலை உணவுக்குப் பின், நாள் முழுவதும் உணவு, நீர் அருந்தாமல் நோன்பு நோற்பதால், பசியோடு இருப்பவர்களுக்குக் கஞ்சி வழங்கி மகிழ்கின்றன தொண்டுணர்வுமிக்க பள்ளிவாசல்கள்.
அவ்வகையில், லிட்டில் இந்தியாவின் டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் தொழுகை மற்றும் இதர நிகழ்வுகளுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான மக்கள் வந்துகொண்டிருப்பதாக அதன் நிர்வாகி இத்ரீஸ் கமால் தெரிவித்தார்.
இம்மாதம் நாள்தோறும் வரும் அன்பர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடுவரை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இரண்டு அமர்வுகளுக்கு தராவீஹ் தொழுகை நடத்தும் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் வழக்கம் இவ்வாண்டும் தொடர்கிறது.
“மக்களின் வருகைக்கு ஏற்ப நோன்புக் கஞ்சி விநியோகத்தை அதிகரித்துள்ளோம். ஜாமிஆ சூலியா பள்ளிவாசலிலிருந்து கஞ்சி பெறப்பட்டு இங்கு வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 2,500 முதல் 2,800 கஞ்சிப் பொட்டலங்கள் அன்பர்களுக்கு வழங்கப்படுகின்றன,” என்று திரு இத்ரீஸ் கூறினார்.
அப்துல் கஃபூர் பள்ளிவாசலைப் போல தாங்களும் பல இன, சமயத்தவரை வரவேற்று, நாளொன்றுக்கு மொத்தம் 2,200 பேருக்குக் கஞ்சி வழங்குவதாக பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி மு.யூ. முகம்மது ரஃபீக் தெரிவித்தார்.
“உணவின் சுவையையும் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாட்டின் முத்துப்பேட்டை என்ற ஊரிலிருந்து புகழ்பெற்ற சமையல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.
மன அமைதியும் உடல்நலமுமே மிகப்பெரிய செல்வம் என்பதை உணர்ந்து இந்த ஆண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திரு ரஃபீக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“குறிப்பாக, இந்தியர்களிடையே காணப்படும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகளைக் கருத்தில்கொண்டு, சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது,” என்றார் அவர்.
பிள்ளைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் தாங்கள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் இரு பள்ளிவாசல்களும் விவரித்தன.
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் பெற்றோர் நிம்மதியாகத் தொழுகையில் ஈடுபடுவதற்காக இவ்வாண்டு குழந்தைப் பராமரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாகத் திரு இத்ரீஸ் கூறினார்.
“அதற்காக, தன்னார்வலர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தொழுகையில் ஈடுபடும்போது, அக்குழுவினர் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். இது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்கிறது,” என்றார் அவர்.
நாள்தோறும் கிட்டத்தட்ட 200 பெண்களும், 800 ஆண்களும், 150 குழந்தைகளும் பென்கூலன் பள்ளிவாசலுக்கு வருவதாகத் திரு ரஃபீக் குறிப்பிட்டார்.
“பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனியாக நலவுணவுகள் வழங்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

