அனுஷா செல்வமணி
கட்டுப்பாடுகள் இல்லாமல் பள்ளிவாசல்களில் தொழுகை, உற்றார் உறவினர்களுடன் சந்திப்பு என்று சிங்கப்பூரர்கள் இந்தாண்டு இன்பமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடியது உட்பட வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் பள்ளிவாசல்களுக்குச் சென்று நோன்புப் பெருநாளை சுதந்திரமாகக் கொண்டாடினர்.
கொவிட்-19 கிருமித்தொற்றினால் 2020ஆம் ஆண்டிலிருந்து பலவித கட்டுப்பாடுகளுக்கு இணங்க பெருநாள் கொண்டாடப்பட்டது. நோய்ப்பரவல் காலத்தில் நாடே முடங்கியிருந்த போது வீட்டிலேயே தொழுது அதன் பின்னர் முன்பதிவு செய்து பள்ளிவாசல்களுக்கு செல்ல வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டது.
ஆனால் இன்று (ஏப்ரல் 22) இடைவெளி கட்டுப்பாடுகள் இல்லாமல் தீவு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடந்தன. லிட்டில் இந்தியாவின் டன்லப் ஸ்திரீட் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நாள் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 முஸ்லிம்கள் தொழுகைகளில் கலந்துகொண்டனர்.
"நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ள இந்த சூழலில் முஸ்லிம்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிவாசல்களுக்கு வந்து மூன்று தொழுகை அமர்வுகளில் கலந்துகொண்டது மிக மகிழ்ச்சிக்குரியது. கடந்த ஈராண்டுகளைவிட இவ்வாண்டு 1000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வந்துள்ளனர்." என்று கூறினார் அப்துல் கஃபூர் பள்ளிவாசல் மேலாளர் திரு முஹம்மது இத்ரீஸ்.
தமிழ் முஸ்லிம்கள் வழக்கமாக வருகை புரியும் சிறப்புமிக்க இந்தப் பள்ளிவாசலுக்கு ஒவ்வோர் ஈகைப் பெருநாளிலும் தவறாமல் கடந்த 45 ஆண்டுகளாக வரும் வணிகர் அப்துல் ஷாஃபி, 62, "இந்த ஆண்டு பெருநாள் என்னை கொவிட்-19 கிருமித்தொற்றை மறக்க வைத்துள்ளது. சென்றாண்டு கட்டுப்பாடுகள் அதிகம் இல்லையென்றாலும் இந்தாண்டு முழுமையான சுதந்திரமாக என்னால் தொழுகை செய்து நண்பர்களை காண முடிந்தது" என பூரித்தார்.
யீஷூனில் வசித்தாலும் பெருநாளின் போது இந்தப் பள்ளிவாசலுக்கு மட்டும் வரும் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் அப்துல் ஜாஃபிர், 36, "பொதுவாக நான் என் தந்தையோடு தான் வருவேன். ஆனால் அவர் இப்போது இந்தியாவிற்குச் சென்றுள்ளார். இருந்தாலும் நான் என் வழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளேன். எனக்கும் என் உறவுகளுக்கும் பாலமாக விளங்கும் இந்தப் பள்ளிவாசலுக்கு வருவது இம்முறை மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது." என்று பகிர்ந்துகொண்டார்.
கிருமித்தொற்று முடக்கிப் போட்ட சூழ்நிலையில் குடும்பத்தினரைப் பிரிந்து தங்கள் தங்கு விடுதிகளில் தொழுது வந்த வெளிநாட்டு ஊழியர்கள் பெருநாள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பங்ளாதேஷ் வெளிநாட்டு ஊழியர்கள் இன்று பிற்பகல் 1 மணி அளவில் எண் 265 சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள அங்கூலியா பள்ளிவாசல் அருகில் திரளாகக் காணப்பட்டனர்.
கடந்த 17 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் முஹம்மது அலி ஹொசைன், 54, "இந்தாண்டு பெருநாள் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. கிருமித்தொற்றுக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தொழுதது மட்டுமின்றி என் இரு மகன்களும் என்னைப் போலவே சிங்கப்பூரில் பணிபுரிகிறார்கள். குடும்பத்தை விட்டு பெருநாள் கொண்டாடிய காலம் போய் இப்பொழுது மனநிறைவுடன் இருக்கிறேன்." என்றார்.
கட்டுமானத் துறையில் பணிபுரியும் 38 வயது சுமோன், "இதற்கு முன்னர் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாமல் நான் தங்கும் பெஞ்சூரு விடுதியில் தொழுது வந்தேன். இன்று காலை எட்டு மணிக்கே பள்ளிவாசலுக்கு வந்து என் நண்பர்களைச் சந்தித்து நிம்மதியாக தொழுதேன்." என்று கூறினார்.
sanush@sph.com.sg


