மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட முதற்கட்ட ஊழியர் சந்தைத் தரவுகளின்படி, நடப்பு 2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சிங்கப்பூரில் ஆட்குறைப்பு சற்றே அதிகரித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 4,800 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக அந்தத் தரவுகள் கூறுகின்றன.
இது முந்தைய காலாண்டின் 4,620 எண்ணிக்கையைவிட 3.9% அதிகமாகும்.
மேலும், 2020ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிறகு பதிவான ஆக அதிகமான ஆட்குறைப்பு எண்ணிக்கை இது.
இருப்பினும், ஒவ்வொரு 1,000 ஊழியர்களுக்கும் ஆட்குறைப்பு விகிதம் 2.0 என்ற அளவில் நிலையாக நீடித்தது.
நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளே ஆட்குறைப்புக்கான முதன்மைக் காரணமாகத் தொடர்ந்து நீடித்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தகவல் தொடர்பு, நிதிச் சேவைகள், உற்பத்தி போன்ற வெளிநாடுகளைச் சார்ந்த குறிப்பிட்ட சில துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து அதிக அளவில் பதிவானது.
குடிமக்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய சிங்கப்பூர்வாசிகள், குடிமக்கள் அல்லாத பிற பிரிவினர் ஆகிய இரு பிரிவினரிடமும் வேலைவாய்ப்பு வேகமாக வளர்ந்தது.
அதில் பெரும்பாலான வளர்ச்சியைக் குடிமக்கள் அல்லாத பிற பிரிவினரே பிரதிபலித்தனர்.
ஒட்டுமொத்தமாக, புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 27,700 ஆக உயர்ந்தது.
இது, முந்தைய காலாண்டின் 11,400, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் 25,100 என்னும் இரு எண்ணிக்கைகளைவிட அதிகம்.
அத்தியாவசியச் சேவைகளிலும் பொதுச் சேவைகளிலும் உள்நாட்டு ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகுந்திருந்த வேளையில், கட்டுமானம், உற்பத்தி போன்ற துறைகளில் வெளிநாட்டினர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாக இருந்தது.
செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.0% என்ற அளவில் மாற்றமின்றி நீடித்தது.
அதே வேளை, ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் குடிமக்களிடையே 2.9 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாகவும் நிரந்தரவாசிகளிடையே 3 விழுக்காட்டிலிருந்து 3.1 விழுக்காடாகவும் சற்று அதிகரித்தது.
அடுத்த மூன்று மாதங்களில் புதிய ஊழியர்களை நியமிக்கவும் ஊதியங்களை உயர்த்தவும் அதிக நிறுவனங்கள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஆயினும், சற்றே அதிகமான நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பொருளியல் நிச்சயமற்ற நிலைக்கு இடையில் முதலாளிகள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருப்பதை கருத்துக்கணிப்பு உணர்த்துவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
