சிங்கப்பூரில் காட்சிக்குவரும் சீனாவின் அரிய பொருள்கள்

சிங்கப்பூரில் காட்சிக்குவரும் சீனாவின் அரிய பொருள்கள்

படம்: சாவ்பாவ்

21 Sep 2026 - 10:16 pm

2 mins read

சீனாவுக்கு வெளியில் இதுவரை செல்லாத அரியவகை வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்களை இவ்வாண்டு இறுதியில் சிங்கப்பூரில் காண முடியும்.

டிசம்பர் 7ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் கண்காட்சியில் சீனத் தேசிய நூலகத்தைச் சேர்ந்த அந்த 41 அரிய பொருள்களைக் கண்டு ரசிக்கலாம்.

தேசிய மரபுடைமைப் பொருள்களில் ஆக உயர் ரகத்தைச் சேர்ந்த இரண்டு கலாசார நினைவுச்சின்னங்கள் அந்த அரிய பொருள்களில் அடங்கும்.

‘ரோமென்ஸ் ஆஃப் த திரீ கிங்டம்ஸ்’, டிரீம் ஆஃப் த ரெட் சேம்பர்’, ‘வாட்டர் மார்ஜின்’, ‘ஜர்னி டூ த வெஸ்ட்’ ஆகிய நான்கு மாபெரும் சீன செவ்விலக்கியங்கள் தொடர்பில் சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் நடைபெறும் ஆறு மாதக் கண்காட்சியில் பொருள்கள் இடம்பெறவிருக்கின்றன.

17 முதல் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொடக்க கால பதிப்புகள், மரப்பலகை அச்சுப் பதிப்புகள், சீன பாரம்பரிய நாடகக் குறிப்புகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும்.
17 முதல் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொடக்க கால பதிப்புகள், மரப்பலகை அச்சுப் பதிப்புகள், சீன பாரம்பரிய நாடகக் குறிப்புகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும். - படம்: சாவ்பாவ்

இம்மாதம் 20ஆம் தேதி பெய்ஜிங்கில் உள்ள தேசிய நூலகத்திற்குச் சென்ற சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியக் குழு, அந்த அரிய பொருள்களைப் பார்வையிட்டது. வாரியத்தின் தலைமை நிர்வாகி மெலிசா டாம் உட்பட அறுவர் அங்குச் சென்றிருந்தனர்.

உயர்தர மதிப்பீடு பெற்ற இரண்டு அரிய பொருள்களில் ஒன்று, புகழ்பெற்ற மிங் வம்சத்தின் தத்துவ அறிஞர், இலக்கிய விமர்சகர், வரலாற்று ஆசிரியரான லி சுவோவுவின் உரையைக் கொண்ட ‘வாட்டர் மார்ஜின்’ நாவலின் ஓர் அரிதான பதிப்பு.

அது தற்போதிருக்கும் 100 அத்தியாயங்களைக் கொண்ட மிகவும் முழுமையான பதிப்பாகும்.

மேலும், சீன அச்சக வரலாற்றில் பெரும் செல்வாக்குச் செலுத்திய கதையின் முக்கியக் காட்சிகளை விளக்கும் உயர்தரமான சித்திரங்களையும் அது கொண்டுள்ளது.

அந்த நூல், ஆசிரியர் ஷி நை’ஆன் எழுதிய மூல உரையில் உள்ள பல கவிதைகளைப் பாதுகாத்து வைத்திருப்பதுடன் அந்த நாவலின் வளர்ச்சிபற்றிய ஆய்வுகளுக்கும் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

17 முதல் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொடக்க கால பதிப்புகள், மரப்பலகை அச்சுப் பதிப்புகள், சீன பாரம்பரிய நாடகக் குறிப்புகள் ஆகியவையும் சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் காட்சிப்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்
சீனாகாட்சியகம்பயன்படுத்திய பொருள்கள்நூல்கள்