சிங்கப்பூரில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு பீட்டர்ஸ் கீல்பேக் (Peters’ keelback) வகை பாம்பு காணப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள லோரோங் பானிர் வனப் பகுதியில் இந்தப் பாம்பு காணப்பட்டது. தொழில்துறை அல்லாத புகைப்படக் கலைஞர்கள் இருவர் பாம்பைக் கண்டனர்.
பீட்டர்ஸ் கீல்பேக் பாம்பு உயிருடன் இருக்கும்போது படமெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது. அப்படங்களை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகம் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 29) இணையத்தில் வெளியிட்டது.
கிட்டத்தட்ட 50 சென்டிமீட்டர் நீளமுள்ள இப்பாம்பு சிறப்பு கலந்த பழுப்பு நிறம்கொண்டது. இப்பாம்பைக் கண்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான டிரின் சாந்தோங் இதனைப் படமெடுத்தார்.
தான் இதுவரை கண்ட பாம்புகள் எல்லாவற்றிலிருந்தும் இது மாறுபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இத்தனைக்கும் அவர் தாய்லாந்தில் வளர்ந்தபோது தனது குடும்பத்துக்காகப் பாம்புகளைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு திரு சாந்தோங்கைத் தெரிந்துகொண்ட ஹமாட் அஸாம், பாம்பைக் கண்ட மற்றொரு நபராவார். நிபுணத்துவம் அல்லாத புகைப்படக் கலைஞர்களான இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பீட்டர்ஸ் கீல்பேக் பாம்பைக் காண நேரிட்டது.