அண்மையில், சிக்லாப்பில் இருக்கும் கூட்டுரிமை குடியிருப்பில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரத்தில் எலி ஒன்று காணப்பட்டது.
சிக்லாப்பில் உள்ள ‘ஃபெர்ன்வுட் டவர்ஸ்’ கூட்டுரிமை குடியிருப்பில் அந்த இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த எலி இயந்திரத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என்பது அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளது.
அந்த இயந்திரத்திற்குள் எலி செய்யும் அட்டகாசத்தை ‘டிக்டாக்’ சமூகத் தளப் பயனர் ஒருவர் காணொளியாக டிசம்பர் 4ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.
ரொட்டி வகைகள் நிரப்பப்பட்ட தட்டுகளில் எலி ஊர்ந்து சென்றதையும் இயந்திரத்திலிருந்து வெளியேற ஏதேனும் வழி கிடைக்குமா என அந்த எலி தேடுவதையும் அந்தக் காணொளியில் காண முடிந்தது.
அந்த இயந்திரம் ‘கார்டினியா’ உணவு தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது.
“இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்,” என அந்த நிறுவனம் மதர்ஷிப்பிடம் தெரிவித்தது.
மேலும், அந்த இயந்திரத்தில் இருந்த அனைத்து உணவுப் பொருள்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன என்றும் மாசுபாட்டை அகற்ற இயந்திரம் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டது என்றும் அந்த உணவு நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

