சிங்கப்பூரின் உண்மையான நண்பர் திரு ரத்தன் டாடா எனவும் அவரின் பங்களிப்பு என்றும் போற்றப்படும் எனவும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெருஞ்செல்வந்தரும் தொழிலதிபருமான ரத்தன் டாடா புதன்கிழமை (அக்டோபர் 9) காலமானார்.
டாடாவின் மறைவு குறித்து பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை பதிவிட்டார்.
“சிங்கப்பூருக்கும் திரு டாடாவுக்கும் பல்லாண்டு உறவுள்ளது. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கியவர் அவர். சிங்கப்பூரில் தொழில்நுட்பம், வணிகம் என பலதுறைகளில் கால்பதித்தவர் டாடா,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
பொருளியல் வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் நாணய ஆணையம் உள்ளிட்ட பல சிங்கப்பூர் நிதி அமைப்புகளுக்கு நல்ல வழிகாட்டியாக திரு டாடா திகழ்ந்ததையும் பிரதமர் வோங் நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூருக்குப் பல்வேறு வழிகளில் உதவிய திரு டாடாவுக்கு 2008ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் கெளரவ சிங்கப்பூர் குடியுரிமை வழங்கி சிறப்பித்தது குறித்தும் திரு வோங் பதிவுசெய்துள்ளார்.
டாடா நிறுவனம் சிங்கப்பூரில் 3,300க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. இவ்வட்டாரத்தில் மட்டும் அது 16க்கும் மேற்பட்ட அலுவலகங்களை கொண்டுள்ளது. அதில் 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.