தம் சகோதரர் தேசிய சேவை புரிந்தபோது அவரது அனுபவங்களைக் கேட்டு வளர்ந்த நரேஷ் ஆறுமுகத்திற்குத் தற்காப்பு, ராணுவத்தின்மீது ஆர்வம் கூடியது.
தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு உபகாரச் சம்பளம் பெற்றுள்ள 22 வயது நரேஷ், படிப்பு முடிந்ததும் நாட்டிற்குப் பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இயந்திரவியல் பொறியியலில் பட்டயப் படிப்பு மேற்கொண்டபோது தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு உபகாரச் சம்பளம் பெற்று தற்காப்புத் துறையில் கால்பதிக்க வேண்டுமென்ற உந்துதல் நரேஷுக்கு ஏற்பட்டது.
பட்டயப் படிப்பு காலத்திலேயே அவர் ஒன்பது மாதங்கள் தற்காப்பு சார்ந்த வேலைப்பயிற்சியை மேற்கொண்டார். அதில் பொறியியல் அம்சங்களும் உள்ளடங்கியதால் தற்காப்பு குறித்தும் பொறியியல் குறித்தும் ஒரே வேலைப்பயிற்சி மூலம் அவரால் கற்றுக்கொள்ள முடிந்தது.
தேசிய சேவையின்போது தம் சகோதரரைப் போலவே நரேஷ் முதல் மின்னற்படைப் பிரிவில் இருந்தார். சிங்கப்பூர் ஆயுதப்படையில் இது சிறந்த போர்ப் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
“என் அண்ணன் முன்னர் கூறிய கதைகளை நான் நினைத்துப் பார்ப்பேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு வலுவடைந்தது,” என்றார் நரேஷ்.
தமது குடும்பத்தில் தற்காப்பு உபகாரச் சம்பளம் பெற்றுள்ள முதல் உறுப்பினர் நரேஷ். திறன்களை மெருகூட்ட தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ஏற்பாடு செய்யும் ‘பிரெய்ன்ஹேக்’ போட்டியிலும் நரேஷ் இருமுறை பங்கேற்றுள்ளார்.
அதில் அவர் தொழில்நுட்பம், விண்வெளிப் பொறியியல் சார்ந்த பலவற்றைக் கற்றுக்கொண்டார். தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பயின்று வருகிறார் நரேஷ்.
தொடர்புடைய செய்திகள்
நரேஷ் உட்பட மொத்தம் 82 பேர் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) தற்காப்பு உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டனர். தற்காப்பு அமைச்சு இந்த ஆண்டு ஏழுப் பிரிவுகளில் உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது.
தெமாசெக் கிளப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உபகாரச் சம்பளங்களை வழங்கினார். தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதும் வருகை புரிந்திருந்தார்.
“உபகாரச் சம்பளம் பெறும் உங்களுக்குப் பல பொறுப்புகள் உள்ளன. நீங்கள்தான் நம் நாட்டை எஸ்ஜி100க்கு கொண்டுசெல்லும் தலைமுறை. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தற்காப்புக்குத் தொழிநுட்பம் இவ்வளவு முக்கியப் பங்காற்றும் என்று நான் நினைக்கவில்லை.
“அதுபோல, ஒவ்வொரு தலைமுறையும் தேவைப்படாது என்ற நினைத்து உருவாக்கும் திறன்கள் எதிர்காலத்தில் மிக முக்கியப் பங்காற்றும்,” என்று அமைச்சர் சான் தனது உரையில் குறிப்பிட்டார்.
உபகாரச் சம்பளம் பெற்றவர்களின் கடமைகள் பற்றிப் பேசிய அமைச்சர் சான், அவர்கள் ஈடுபடவிருக்கும் பணி எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.
“இது கேட்பதற்கு சவால்மிக்கதாக இருந்தாலும் நீங்கள் ஒன்றுபட்டு நாட்டிற்காகப் பணியாற்றுவீர்கள். உலகம் முழுவதும் நிகழும் புவிசார் அரசியல் தொடர்பான விவகாரங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள்.
“நீங்கள்தான் சிங்கப்பூரை இதுபோன்ற சவால்களிலிருந்து சரியான முறையில் நகர்த்திச் செல்ல வேண்டும். எஸ்ஜி100ஐ எட்டுவதும் எட்டாமல் இருப்பதும் இந்தத் தலைமுறையின் கைகளில்தான் உள்ளது,” என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.
உபகாரச் சம்பளம் பெற்ற இன்னொருவர் காவேரி செல்வன் தருண், 20. தருணுக்கு பொதுச் சேவையில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற ஆசை எப்போதும் இருந்து வந்தது.
ஆனால், தேசிய சேவையின்போது அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தில் பிரிவுக்கான தளபதியாக இருந்த தருணுக்கு தற்காப்புமீது ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.
தளபதியாக இருந்தபோது தலைமைத்துவத் திறன்கள், குழுக்களுடன் ஒத்துழைப்பது போன்றவற்றை தருண் கற்றுக்கொண்டார்.
தற்காப்பு தகுதிக்கேற்ற உபகாரச் சம்பளம் பெற்றுள்ள தருண் விவாதங்களிலும் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்.
அந்த அனுபவத்தை வைத்து தற்காப்பு அமைச்சில் சேரும்போது பேச்சுத் திறன் மூலம் பணியில் திறம்படச் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.
ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் மெய்யியல், அரசியல், பொருளியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு மேற்கொள்ளவுள்ளார் தருண்.