‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்’

‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்’

2 mins read
c844f51f-f273-4c5e-8d8b-4766ecf80281
‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்!’ (MTL SOAR) முன்னோடித் திட்டத்தை தம் பள்ளியில் செயல்படுத்திய குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி ஆசிரியை நஜுமுநி‌‌‌ஷா (வலம்). - படம்: பே கார்த்திகேயன்

அடுத்த ஆண்டிலிருந்து தொடக்கநிலை 1, 2 மாணவர்களுக்காக ‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்!’ (MTL SOAR) எனும் வாசிப்புத் திட்டம் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு, ஆசிரியர்கள், பெற்றோரிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளியில் இதற்கான முன்னோடித் திட்டம் சில வாரங்களுக்கு இடம்பெற்றது.

அத்திட்டத்தை தம் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களுக்கு வழங்கிய தமிழாசிரியை நஜுமுநி‌‌‌ஷா, அத்திட்டத்தின் அமைப்புமுறையால் தம் மாணவர்களின் தமிழ்மொழி கற்றல் ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

“நான் ஒரு கதை நூலை எடுத்துக்கொண்டு வகுப்பறையில் நுழையும்போதே அவர்கள் உற்சாகமடைகின்றனர். கதை எதனைப் பற்றியது எனத் தாமாகவே கேட்கின்றனர்,” என்றார் திருவாட்டி நஜுமுநி‌‌‌ஷா.

இதனால், மாணவர்கள் தங்கள் நண்பர்களுக்கிடையே கதைகளைப் பற்றி உரையாடுவதாகவும் தாமே கதைகளை எடுத்துப் படிப்பதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின்படி, பள்ளிகளுக்கு வாசிப்புக் கடப்பிதழ்கள், ஆசிரியர்களுக்கு வழிகாட்டிகள், போன்றவை வழங்கப்படும்.

“தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து கல்வி அமைச்சின் தமிழ்த் துறை, மாணவர்களின் வயதுக்கு ஏற்ற நூல்களை வழங்கும்,” என்றார் கல்வி அமைச்சு தாய்மொழித் துறையின் உதவி இயக்குநரும் முதன்மைச் சிறப்பாய்வாளருமான முனைவர் த வேணுகோபால்.

“என் மகன் ஒன்றரை மாதமாக வாசிப்புக் கடப்பிதழ் முன்னோடித் திட்டத்தில் பங்கேற்கிறார். அவர் வாசிக்கும் நூல்கள் அவரது கடப்பிதழில் பதிவாகின்றன. இத்திட்டம் நல்ல மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. முன்பெல்லாம் கடினமான சொற்கள் வரும்போது என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். ஆனால், இப்போது அவர் தாமாகவே எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்,” என்றார் குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி தொடக்கநிலை ஒன்று மாணவர் கணே‌ஷ்ராம் ஜெய்குமாரின் தாயார் திருவாட்டி விசாலாட்சி.

வகுப்பில் நடத்தப்படும் பொம்மலாட்டம், வண்ணம் தீட்டுதல், கதைக்கு ஏற்ப படங்களை வரிசைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் தன் மகனுக்குப் பிடித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தாய்மொழிப் பயிலரங்கில் ‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்!’ சாவடிக்கு வந்திருந்த மாணவர்கள் அதன் நடவடிக்கைகள் சிலவற்றில் பங்கேற்றனர்.

“இது ஒரு நல்ல முன்னெடுப்பு. நேரடியாகக் கதைசொல்லாமல், விளையாட்டுமூலம் கதைசொல்வது அவர்களைத் தூண்டுகிறது,” என்றார், அதில் பங்கேற்ற ஒரு சிறுவனின் தந்தையான திரு அருண் சண்முகசுந்தரம்.

“கதைகளைத் தாண்டி, நடைமுறை வாழ்வையொட்டிய தலைப்புகளையும் வழங்கி மாணவர்களைப் பேசச் சொல்லலாம். இன்றைய சிறுவர்களின் பொது அறிவு, சமூக ஊடகங்களினால் வெகுவாக வளர்ந்துள்ளது,” என்றார் இன்னொரு சிறுவனின் தந்தையான திரு பன்னீர்செல்வம்.

குறிப்புச் சொற்கள்