முழுமைத் தற்காப்பு தினம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு மொத்தம் 187 பேர் நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘ரெடி டு ஈட்’ எனும் உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவு மூலம் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
பள்ளிகளைச் சேர்ந்த 184 பேரும் துடிப்புடன் முப்படையும் நிலையங்களிலிருந்து இருவரும் அரசாங்க முகவையிலிருந்த ஒருவரும் நோய்வாய்ப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 0.16 விழுக்காட்டினர் பாதிப்படைந்ததாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பாதிப்படைந்த அனைவரும் தேவையான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டனர்,” என்று அமைச்சர் ஃபூ கூறினார்.
அவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர்.
அண்மையில் ‘சோட்டா’ எனும் சிங்கப்பூர் கலைப் பள்ளியில் ஏற்பட்ட நச்சு உணவு பாதிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் ஃபூ பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அப்பள்ளியில் உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவை உண்ட பிறகு 20 மாணவர்கள் நோய்வாய்பட்டனர்.
அந்த உணவுவகை தேசிய அவசரநிலைகளின்போது பொதுமக்கள் சாப்பிடுவதற்காக சேட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
2025 ‘எக்சர்சைஸ் எஸ்ஜி ரெடி’ திட்டத்துக்காக பிப்ரவரி 15லிருந்து 28 வரை விநியோகிப்பட இருந்த 15,000 ‘ரெடி டு ஈட்’ பொட்டலங்களில் நச்சு உணவு விவகாரத்துடன் தொடர்புடைய உணவும் அடங்கும்.
சம்பந்தப்பட்ட உணவுப் பொட்டலங்களிலிருந்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளை சிங்கப்பூர் உணவு அமைப்பு சோதனையிட்டது.
அதில் உணவு வாயிலாகப் பரவும் நோய்க்கிருமிகள் தென்படவில்லை என்று அமைச்சர் ஃபூ கூறினார்.
“இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் முழுமையான விசாரணை நடத்துகின்றன. ஏதேனும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றைச் சரிசெய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ‘ரெடி டு ஈட்’ உணவு மீது பொதுமக்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
“இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்போதைக்குச் சொல்ல முடியாது. இவ்வாறு மீண்டும் நிகழாதிருக்க சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை எடுக்கும். உணவு மீள்திறன் திட்டம் தொடர்பாகப் பள்ளிகள், உணவு நிறுவனங்கள், சமூகப் பங்காளிகளுடன் அது தொடர்ந்து செயல்படும்,” என்றார் அமைச்சர் ஃபூ.
‘சோட்டா’ பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நச்சு உணவு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, பிப்ரவரி 20ல் முழுமைத் தற்காப்பு உணவு மீள்திறன் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

