தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேரிமவுண்டில் கடும் போட்டிக்குத் தயார்: கான் சியாவ் ஹுவாங்

2 mins read
967a559d-ab26-49f2-9a7f-baf1042df71e
மேரிமவுண்ட்டில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங்கை (இடது) எதிர்த்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஜெஃப்ரி கூ (வலது) போட்டியிடவுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மேரிமவுண்ட் தனித் தொகுதியில் இடம்பெறக்கூடிய கடும் போட்டியைச் சந்திக்கத் தாம் தயார் என்று மனிதவள, கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கிய திருவாட்டி கான், மேரிமவுண்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேரிமவுண்டில் தாம் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறேன் எனத் தான் நம்புவதாக அவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) தெரிவித்தார்.

முன்னாள் ராணுவ அதிகாரியான அவர், அதையும் தாண்டிய ஒருவராகக் குடியிருப்பாளர்கள் தம்மைப் பார்ப்பதாகக் கூறினார்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கும் சீன நீர் தேவதைக் கடவுளான மாஸுவின் (Mazu) பிறந்தநாள் இரவு விருந்துக்கும் நடுவே திருவாட்டி கான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார். தமது குழு கடந்த ஐந்தாண்டுகளாக நன்கு செயல்பட்டுள்ளபோதும் ஒன்பது நாள் பிரசாரக் காலத்தில் தாங்கள் மேலும் தீவிரமாகக் குடியிருப்பாளர் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

2020 பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆங் யோங் குவானுடனான போட்டியில் குறுகிய வித்தியாசத்தில் வென்றதற்கு நன்றியுடன் இருப்பதாக 50 வயது கான் தெரிவித்தார். மேரிமவுண்ட் தனித் தொகுதியில் திருவாட்டி கான் 55.04 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். டாக்டர் ஆங் 44.96 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.

மனநல மருத்துவரான டாக்டர் ஆங் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார். வேலையில் முறைதவறி நடந்துகொண்டதற்காக அவருக்கு மருத்துவராகப் பணியாற்ற மூவாண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுத் தேர்தலில் திருவாட்டி கானை எதிர்த்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஜெஃப்ரி கூ போட்டியிடுவார். திரு கூ, 2020 பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணியில் இடம்பெற்றவர். அந்த அணிதான் அத்தேர்தலில் ஆகச் சிறப்பாகச் செய்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணியாகும்.

தம்மை எதிர்த்துப் போட்டியிடவுள்ள வேட்பாளர் குறித்துக் கேட்கப்பட்டபோது திருவாட்டி கான், “சிங்கப்பூரர்கள் நல்ல முடிவுகளை எடுக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள். எந்தக் கட்சி, எந்த வேட்பாளரால் சிங்கப்பூரை வலுவான, ஒற்றுமையான, வருங்காலச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நாடாக வைத்திருக்க முடியும் என்ற தங்களின் நம்பிக்கைகேற்ப அவர்கள் வாக்களிப்பர் என நான் நம்புகிறேன்,” என்று பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்