சம்பள உயர்வில் மெதுவான வளர்ச்சி

சம்பள உயர்வில் மெதுவான வளர்ச்சி

2 mins read
26074ab7-dbbf-4220-8493-388515fd125f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் முதலாளிகள் ஒட்டுமொத்த சம்பளத்தை பத்தாண்டு காணாத அளவுக்கு கடந்த ஆண்டு உயர்த்தினார்கள். இருப்பினும், அதிக பணவீக்கத்தால் இயல்பான சம்பள உயர்வு அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் குறைவானதாக இருந்தது.

பணவீக்கத்தோடு கணக்கிடப்படாத அடிப்படை சம்பள உயர்வு கடந்த ஆண்டு 6.5 விழுக்காடு வளர்ந்தது. 2021ஆம் ஆண்டு அந்த விகிதம் 3.9 விழுக்காடாக இருந்தது.

மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை இதனைத் தெரிவித்தது.

இருப்பினும், அதிக பணவீக்கம் காரணமாக இயல்பான ஒட்டுமொத்த சம்பள உயர்வு 0.4 விழுக்காடாகப் பதிவானது.

2021ஆம் ஆண்டு அந்த விகிதம் 1.6 விழுக்காடாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டின் இந்த உயர்வு விகிதம் 2012க்குப் பிறகு ஆகக் குறைவானது.

அடிப்படைப் பணவீக்கம் 2021ஆம் ஆண்டு 2.3 விழுக்காடாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 6.1 விழுக்காட்டுக்கு அது அதிகரித்தது.

அதேபோல, முதலாளியின் மத்திய சேமநிதிப் பங்களிப்புகளை உட்படுத்தாத இயல்பான அடிப்படை சம்பள உயர்வு 1 விழுக்காடு சரிந்தது.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வீழ்ச்சி பதிவானது.

இந்நிலையில், ஒட்டுமொத்த அடிப்படைச் சம்பளமும் இயல்பான சம்பளமும் இவ்வாண்டு மிதமான வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

மந்தநிலையை உலகப் பொருளியல் எதிர்நோக்குவதாலும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழல் காரணமாகவும் எச்சரிக்கையுடனான சம்பள உயர்வு என்னும் அணுகுமுறையைப் நிறுவனங்கள் பின்பற்றுவது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றது அமைச்சு.

இங்குள்ள ஊழியர்களில் கிட்டத்தட்ட 82 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு சம்பள உயர்வு பெற்றனர். அதற்கு முந்திய 2021ஆம் ஆண்டில் 70 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களுக்கே சம்பள உயர்வு கிடைத்தது.

அதாவது, கடந்த ஆண்டு ஏறக்குறைய நான்கில் மூன்று ஊழியர்களும் 2021ஆம் ஆண்டு 10ல் 6 ஊழியர்களும் 2019ஆம் ஆண்டு 10ல் 7 ஊழியர்களும் சம்பளம் உயர்வு பெற்றனர்.

முதலாளிகளின் வருமான உயர்வின் அடிப்படையில் இது அமைந்தது. கிட்டத்தட்ட 10ல் 8 முதலாளிகள் இரண்டாவது ஆண்டாக லாபம் ஈட்டக்கூடியவர்களாக மாறினர்.

அதேநேரம், சம்பளக் குறைப்புகளும் சம்பளத்தில் மாற்றமில்லா நிலையும் கடந்த ஆண்டு காணப்பட்டது.

22.6 விழுக்காட்டினரின் சம்பளம் மாற்றமின்றி தொடர்ந்த வேளையில், மிகக் குறைவாக 5.2 விழுக்காட்டினரின் சம்பளம் மட்டும் வெட்டப்பட்டது. 2021ல் அந்த விகிதம் 4.5 விழுக்காடாக இருந்தது. சராசரியாக சம்பள உயர்வு பெற்றவர்களின் விகிதம் 7.9 விழுக்காடு வளர்ந்தது. 2021ல் அந்த விகிதம் 6.3 விழுக்காடாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரிலுள்ள எல்லாத் தொழில்துறைகளிலும் 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு சம்பள உயர்வு அதிகமாக வளர்ச்சி கண்டது என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தங்குமிடம் மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் ஆக அதிக சம்பள உயர்வு காணப்பட்டதாக அது கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்