ஒருவகை செயற்கை இனிப்பூட்டி இடம்பெற்றுள்ளதால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கடலை மீட்டுக்கொள்ளப்படுவதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
‘YTY கார்லிக் பீநட்ஸ்’ என்ற அந்த நிலக்கடலை 150 கிராம் எடைகொண்டது. அதன் காலாவதித் தேதி 2025 ஏப்ரல் 8.
‘சைக்லமேட்’ எனும் இனிப்பூட்டி கலந்திருப்பதால் அதனை மீட்டுக்கொள்ளும்படி அதன் இறக்குமதியாளரான ‘யான் தை யிட்’ நிறுவனத்திற்கு உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் மென்பானங்களிலும் கலன்களில் அடைக்கப்பட்ட பழங்களிலும் ‘சைக்லமேட்’ வேதிப்பொருளைப் பயன்படுத்தலாம். ஆனால், கொட்டைப் பருப்புகளிலும் விதைகளிலும் அதனைச் சேர்க்க அனுமதியில்லை.
“சைக்லமேட் சேர்க்கப்பட்டுள்ள வால்நட், மற்ற கொட்டைப் பருப்பு, விதை வகைகளை உண்பதால் உடனடியாக உடல்நலத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது, அதே வேளையில், நீண்ட காலத்திற்கு அதிகப்படியாக அதனை உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்,” என்று உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொட்டைப் பருப்பு, விதை உணவுப்பொருள் மாதிரிகளைத் தற்போது சோதித்து வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்தது.
அச்சோதனைகளில் அனுமதிக்கப்படாத இனிப்பூட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை அடங்கியுள்ள உணவுப்பொருள்களை மீட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.