ஊழியர்களின் வேலை முன்னேற்றத்திலும் சம்பள உயர்விலும் கூடுதல் கவனம் செலுத்தும் 300 நிறுவனங்களின் பட்டியல் புதிய இணையத்தளத்தில் இடம்பெறவுள்ளது. அடுத்த ஆண்டின் (2026) முதல் காலாண்டிலிருந்து அந்த நிறுவனங்கள் யாவை என்பதை ஊழியர்கள் தெரிந்துகொள்ள முடியும். பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்கள் புதிய குறியீட்டின் மூலம் அடையாளம் காணப்படும். ‘சிங்கப்பூர் வாய்ப்புக் குறியீடு’ என்று அது வழங்கப்படுகிறது.
திறனாளர்களை ஈர்க்கவும் தங்கவைத்துக்கொள்ளவும் பேணிவளர்க்கவும் நிறுவனங்களை ஊக்குவிப்பது நோக்கம். அரசாங்க ஊழியரணிக் கொள்கைகளுக்கும் ஊழியர்களின் சொந்தத் திறன் மேம்பாட்டுக்கும் புதிய முயற்சி ஆதரவாக அமையும்.
ஊழியர்களின் ஊதியம், முன்னேற்றம், பாலினப் பிரதிநிதித்துவம் முதலியவற்றில் நிறுவனங்கள் எந்த அளவுக்குக் கவனம் செலுத்தியுள்ளன என்பதைப் புதிய குறியீடு கருத்தில் கொள்ளும். ஊழியர்களை வேலைக்கு எடுப்பதிலும் தக்கவைத்துக்கொள்வதிலும் என்னென்ன அம்சங்களை அவை கடைப்பிடிக்கின்றன என்பதும் பார்க்கப்படும்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கருத்தரங்கு ஒன்றில் புதிய குறியீட்டை வெளியிட்டார். ஊழியர்களின் செயல்பாடுகளை நிறுவனங்களின் நடைமுறைகள் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளக் குறியீடு உதவும் என்றார் அவர்.
‘மக்களுக்குப் பின்னால் மக்கள்’ எனும் பொருள்கொண்ட கருத்தரங்கில் அவர் பேசினார். மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மனிதவள நிபுணத்துவத் தொழிலர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் 750 பேராளர்கள் கலந்துகொண்டனர்.
புதிய குறியீடு, நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை என்று டாக்டர் டான் கூறினார்.
மாறாகத் திறனாளர்களைப் பேணிவளர்ப்பதற்கு நிறுவனங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதே குறிக்கோள் என்றார் அவர். புதிய இணையத்தளத்தின் மூலம் நம்பத்தகுந்த தரவுகளை நிறுவனங்கள் பணம் கொடுக்காமல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் டான் சொன்னார்.
குறியீட்டின் முதல் பதிப்பில் அரசாங்க, தனியார் துறைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 1,500 நிறுவனங்கள் பங்கெடுத்தன. அந்த நிறுவனங்களில் குறைந்தது 100 உள்ளூர்வாசிகள் வேலை செய்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடனும் அமெரிக்காவின் சுயேச்சை ஆய்வு நிறுவனமான ‘தி பர்னிங் கிளாஸ்’ நிலையத்துடனும் இணைந்து புதிய குறியீட்டை உருவாக்கியுள்ளது.