தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் 75வது ஆண்டு நிறைவு

தன்னலமின்றி சேவையாற்றிய தொண்டூழியர்களுக்கு அங்கீகாரம்

2 mins read
4ed54f8f-5a1c-452d-a1f0-1f7e11cfc5cf
பாராட்டு விருதைப் பெற்ற நீதா ராஜசேகரன், உயர் பாராட்டு விருதைப் பெற்ற சத்யநாராயணா மைலாவரப்பு. - படம்: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

குடும்பத்தினரைவிட்டு வேலைக்காக சிங்கப்பூருக்கு வந்தபோது தொண்டூழியம் மூலம் தனது நேரத்தைப் பயனுள்ளதாகக் கொண்டார் சத்யநாராயணா மைலாவரப்பு, 50.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபடத் தொடங்கிய இவர், கடந்த 10 ஆண்டுகளில் 2,600 மணி நேரம் சேவையாற்றியுள்ளார்.

உள்ளூர் மனிதநேய தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, வெளிநாட்டுப் பேரிடர் நியமன பயிற்சியையும் மேற்கொண்டுள்ள இவர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

மூவாண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது அங்கு சென்ற இவர், ஈராண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் சென்று சேவை புரிந்துள்ளார்.

துவண்டுபோகாமல் தொண்டாற்றி வரும் சத்யநாராயணாவுக்கு திங்கட்கிழமை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் பாராட்டு விருது கிடைத்தது.

“தொடக்கத்தில் தொண்டூழியத்தில் இறங்கும்போது எளிதாகவே இருக்கும். ஆனால், அதில் முழுமூச்சுடன் கடைசி வரை இருப்பதே கடினம். தொண்டூழியம், எனக்கு இரண்டாவது குடும்பம்போல. சிங்கப்பூருக்கு வந்த பிறகு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பல நண்பர்கள் எனக்குக் கிடைத்தனர்,” என்று சத்யநாராயணா கூறினார்.

மனிதகுலத்திற்குச் சேவையாற்றி வரும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், அதன் 75வது ஆண்டு நிறைவை திங்கட்கிழமை கொண்டாடியது. அயராது தொண்டாற்றியவர்களுக்கும் பங்காளிகளுக்கும் விருது வழங்கி அது சிறப்பித்தது.

பிடோக்கில் உள்துறைக் குழுவின் தேசிய சேவை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தொடக்க உரையாற்றிய சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் டான் காய் ஹோ, “75 ஆண்டுகளை கடந்து வந்துள்ள சங்கம், இனி வேறென்ன வழிகளில் சேவையைத் தொடரலாம் என்பதைத் திட்டமிட வேண்டும்.

“உலகில் பலவித சம்பவங்கள் நிகழும் இந்நேரத்தில் மனிதநேய சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். விரைவாக மூப்படையும் சமூகத்தில் ரத்த தானம் வழங்க அதிகமானோர் தேவைப்படுகின்றனர்.

“வெளிநாட்டு ஊழியர்கள், தனிமையில் வாழும் முதியோர், உடற்குறையுள்ளோர் என பலதரப்பினருக்கும் சேவையாற்றுவதை நிறுத்திவிடக் கூடாது,” எனக் கேட்டுக்கொண்டார்.

வெவ்வேறு பிரிவுகளில் விருதுபெற்ற 200க்கும் மேற்பட்டவர்களில் ஒருவரான நீதா ராஜசேகரன், 30, பாராட்டு விருதைப் பெற்றார்.

உலக ஈடுபாட்டுக் குழுவில் தொண்டாற்றி வரும் அவர், பேரிடர் கண்காணிப்பு பயிற்சிக் குழுத் தலைவராக இருந்து பேரிடர்களின்போது உடனடி உதவி வழங்குவதில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

கம்போடியாவுக்குச் சென்றது, தமது தொண்டூழியப் பயணத்தில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீதா பகிர்ந்தார்.

“அங்குள்ள சில கிராமங்களுக்குச் சென்று பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் பற்றி இதர தொண்டூழியர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். தொண்டூழியம் என்னை தன்னலமின்றி இருக்க கற்றுத் தந்துள்ளது,” என்றார் அவர்.

விருது வழங்கும் அங்கத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சமூகத்தை சென்றடையும் திட்டத்தை அதிபர் தர்மன் தொடங்கிவைத்தார். சங்கத்தின் மனிதநேய முயற்சிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இத்திட்டம் செயல்படும்.

தீவு முழுவதும் உள்ள குறிப்பிட்ட கடைத்தொகுதிகளிலும் சமூக மன்றங்களிலும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கும் கூடங்களுக்குச் சென்று பொதுமக்கள் தகவல் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்