‘எம்எஸ்எஃப்’ இளையர் இல்லங்களைச் சேர்ந்தோர்க்கு அங்கீகாரம்

‘எம்எஸ்எஃப்’ இளையர் இல்லங்களைச் சேர்ந்தோர்க்கு அங்கீகாரம்

2 mins read
2160f442-ba3a-4422-8718-c99812847661
இளையர் இல்லங்களைச் சேர்ந்த இளையர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) விருதுகள் பெற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சட்ட, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். - படம்: சாவ்பாவ்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் (எம்எஸ்எஃப்) இளையர் இல்லங்களைச் சேர்ந்த 56 இளையர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) 119 விருதுகள் பெற்றனர்.

முதன்முறையாக, சிறுவர், சிறுமியர் இல்லங்களைச் சேர்ந்த விருந்தினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த தேசிய இளையர் சாதனை விருது நிகழ்ச்சியில் ஒன்றுகூடினர்.

சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கலந்துகொண்டார்.

பணியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த திரு சுவா, நிகழ்ச்சி வெறும் பாராட்டுகளைப் பற்றியது மட்டுமல்ல என்று குறிப்பிட்டார்.

“பெரிய கனவுகளைக் கண்டு அவற்றை நனவாக்குவதற்கான திறமை இளையர்களிடம் உள்ளது என்பதற்கு இந்த விருதுகள் ஒரு சான்றாகும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பொதுக் கல்­விச் சான்­றி­தழ் சாதா­ர­ண நி­லை, பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலை தேர்வுகளை எழுதிய ஒவ்வொரு மாணவரும் உயர்கல்விக்குத் தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் சொன்னார்.

சிறுவர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தேசிய இளையர் சாதனை விருதுகள் 2024ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு சிறுமியர் இல்லத்துக்கு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கற்றல், சுற்றுச்சூழல், நல்வாழ்வுமுறை ஆகிய மூன்று முக்கியக் கூறுகள்வழி இளையர்களின் ஈடுபாட்டை அந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.

இல்லங்களில் ஏற்கெனவே வழங்கப்படும் பாடத்திட்டத்திற்கும் மேலாக, 6 முதல் 12 மாதக் கால இடைவெளியில் இளையர்கள் அந்த மூன்று கூறுகளின்கீழ் உள்ள நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள்.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு அந்த நடவடிக்கைகளில் பங்கேற்ற 51 இளையர்கள் வெண்கல விருது பெற்றனர்.

ஓராண்டுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்கப்பூர் சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் வெள்ளி விருது பெற்றனர்.

விருது பெற்றவர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்
இளையர்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுவிருதுசிங்கப்பூர்