செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு புகாரளிப்புத் திட்டத்துக்குப் பரிந்துரை

செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு புகாரளிப்புத் திட்டத்துக்குப் பரிந்துரை

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

29 Oct 2026 - 5:42 pm

2 mins read

செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அது தொடர்பான சம்பவங்களைப் புகாரளித்து விழிப்புணர்வு பெறுவதற்கான ஒரு சிறிய முன்னோடித் திட்டத்தை ஆர்வமுள்ள தரப்புகளும் நாடுகளும் தொடங்கலாம் என்று சிங்கப்பூர் பரிந்துரைத்துள்ளது.

இத்தகைய சம்பவங்களைப் பகிர்ந்து, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கான முறையான ஏற்பாட்டுக்கு இது அடித்தளமாக அமையும்.

அண்மைக்காலமாகச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு சம்பவங்கள் உலகளவில் தீவிர ஆய்வுக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில், அதிநவீன முன்னோடிச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் பாதுகாப்பு குறித்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களிடையே புதன்கிழமையன்று (அக்டோபர் 28) பிரதமர் லாரன்ஸ் வோங் இக்கருத்தை முன்வைத்தார்.

தொடக்கத்திலேயே விரிவான புதிய அனைத்துலகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதைவிட, நடைமுறைக்கு உகந்த மற்றும் நீக்குப்போக்கான அணுகுமுறையுடன் பணிகளைத் தொடங்குவதே சிறந்தது என்று பிரதமர் வோங் சுட்டினார்.

பரந்த அளவிலான கட்டமைப்புக்கு மாறுவதற்கு முன்னர், எது பலனளிக்கிறது என்பதை சோதித்துப் பார்க்கவும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்த முன்னோடித் திட்டம் ஒத்த கருத்துடைய நாடுகளுக்கும் தரப்புகளுக்கும் உதவும் என அவர் எடுத்துரைத்தார்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான கடுமையான சம்பவங்கள் நேரும்போது, அதிலிருந்து பெறப்படும் பாடங்கள் ஒரு நாட்டிற்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ மட்டுமே மட்டுப்படுத்தப்படக்கூடாது என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.

என்ன தவறு நடந்தது என்பதை உணர்ந்து, உருவெடுத்து வரும் அபாயங்களை அடையாளம் கண்டு, இதுபோன்ற சம்பவங்கள் வேறெங்கும் நிகழாமல் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் இத்தகைய அணுகுமுறை ஏற்கெனவே வெற்றிகரமாகக் கையாளப்படுவதை பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார். அத்துறையில் விபத்துகளும் நூலிழையில் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதங்களும் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு ஆராயப்படுவதன் மூலம் பாதுகாப்புத் தரநிலைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, கற்றறிந்து பாதுகாக்கும் கலாசாரத்தைச் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் வளர்த்தெடுக்க முடியும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்