குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் நிறுவனங்கள் அவர்களுக்குக் கூடுதல் ஊதிய உயர்வை வழங்க தேசியச் சம்பள மன்றம் பரிந்துரைத்துள்ளது.
தேசிய சம்பள மன்றம் ஆண்டுதோறும் கூடி சம்பள வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-26க்கான தனது பரிந்துரைகளைச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) மன்றம் வெளியிட்டது.
அதன்படி, குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு 5.5 விழுக்காடு முதல் 7.5 விழுக்காடு வரை ஊதிய உயர்வு வழங்க மன்றம் பரிந்துரைத்துள்ளது. சாதகமான வர்த்தகச் சூழல்களுடன் செயல்பட்ட நிறுவனங்கள் குறைந்தது $105 முதல் $125 வரையிலான ஊதிய உயர்வை வழங்கிட பரிந்துரைந்துள்ளது தேசிய சம்பள மன்றம்.
இந்தப் பரிந்துரை $2,700 வரை சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
நிலையற்ற பொருளியல் சூழல் ஊழியர்களுக்குக் கடும் சவால்களை அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள மன்றம், இதனைக் கவனத்தில் கொண்டு நிறுவனங்கள் நியாயமான நீடித்த நிலையான ஊதிய உயர்வை வழங்கி, குறைந்த வருவாய் ஊழியர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
நீக்குப்போக்கான ஊதியத்தைக் கைக்கொள்ளும் வகையில் முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது, திறன்மிக்க ஊழியரணியை வடிவமைத்திட செயற்றை நுண்ணறிவு உள்ளிட்ட தகுந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாடுவது, சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் மன்றத்தின் பரிந்துரைகளில் முக்கிய இடங்களைப் பிடித்திருந்தன.
இதற்கிடையே, 2025-26 காலகட்டத்திற்கான தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
2025 முதலாம் காலாண்டில் வேலைவாய்ப்புச் சந்தை மீள்திறனுடன் திகழ்ந்ததாகவும் வேலைவாய்ப்பு, ஆட்குறைப்பு தொடர்பான விகிதமும் குறைவான அளவில் இருந்ததாகவும் மனிதவள அமைச்சின் அறிக்கை விவரித்தது.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல் வரி உயர்வு உட்பட உலக அரங்கில் நிகழும் மாற்றங்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேசிய சம்பள மன்றம், ஒருசில தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்ததாகக் குறிப்பிட்டது. எனினும், சவாலான சூழ்நிலைகளை மேம்படுத்த நிறுவனங்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது சுட்டியது.
சிங்கப்பூர் வளர்ச்சியடைந்து வருவதால் அதன் பயனை ஒவ்வோர் ஊழியரும் பெற்றிடும் வகையில், குறைந்த வருமான ஊழியர்களைக் கைதூக்கிவிட தேசிய அளவிலான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மன்றம் கேட்டுக்கொண்டது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான தொழிலாளர் சந்தை அறிக்கையின்படி, மார்ச் மாதம் 81,000 பணி காலியிடங்கள் இருந்தன. ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கை ஜூன் மாதம் 76,900ஆக குறைந்தது.
தொழில்சார்ந்த படிப்படியான சம்பள உயர்வு முறை அடிப்படையில் நிர்வாகவியலாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கான சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளையும் மன்றம் வெளியிட்டது.
புதுப்பிக்கப்பட்ட இந்தப் பரிந்துரைகள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் முழுநேர நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்களாக இருக்கும் ஏறக்குறைய 57,600 குறைந்த வருவாய் ஊழியர்களுக்குப் பொருந்தும். இதன் தொடர்பிலான சம்பள உயர்வை ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் எதிர்பார்க்கலாம்.
ஆற்றல்மிகு செயல்திறனுடன் இயைந்து சம்பள உயர்வு இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிய மன்றம், நீக்குப்போக்கான சம்பள முறையை முழுமையாக நடைமுறைப்படுத்திய நிறுவனங்களின் விகிதம் 8.5 விழுக்காடு என்ற அளவில் கடந்த ஆண்டு நிலையாக இருந்ததாகவும் சொன்னது.
விரைவாக மூப்படைந்து வரும் தேசத்தின் ஊழியரணி குறித்தும் கருத்துரைத்த மன்றம், ஊழியரணியில் இடம்பெற்றிருந்த 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரின் எண்ணிக்கை விகிதம் 2014ஆம் ஆண்டு 12.3 விழுக்காடு என்றும், அது 2024-ல் 18.9 விழுக்காடாக உயர்ந்தது என்றும் குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டில் மன்றம் பரிந்துரைத்த குறைந்த வருமான ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் விகிதம் 26.2% ஆக இருந்தது. மேலும், 60 விழுக்காட்டு நிறுவனங்கள் குறைந்த வருவாய் ஊழியர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சம்பள உயர்வை வழங்கின.
அமெரிக்க வரிவிதிப்பு, அனைத்துலக அளவில் நிலவும் நிலையற்ற சூழல்களின் தாக்கம் பொருளியல் முன்னேற்றத்தில் எதிரொலித்தாலும் தொழிலாளர் சந்தை மீள்திறனுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மன்றம் மேலும் கூறியது.
ஊழியர்களின் திறன்களை மறுமலர்ச்சி அடையச் செய்யும் முயற்சிகளில் வேலை நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றும் இதற்காக நடைமுறையில் இருக்கும் திட்டங்களை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மன்றம் கேட்டுக்கொண்டது.

