மாறிவரும் சூழலில் சிங்கப்பூரின் வளர்ச்சியை உறுதிசெய்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான உத்திகளைப் பரிந்துரைத்துள்ளன பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் (Economic Strategy Review (ESR) Committees).
மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு இப்பரிந்துரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எட்டுத் தலைப்புகளின்கீழ் குறிப்பிட்ட பரிந்துரைகளை அவை வழங்கியுள்ளன.
இந்தப் பரிந்துரைகளின் முக்கியத்துவம் குறித்து, மே 13 ஆம் தேதியன்று நடைபெற்ற எதிர்காலப் பொருளியல் மாநாட்டில் துணைப்பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் எடுத்துரைத்தார்.
“உலகமயமாக்கலினாலும், நம்பகமான, உறுதியான பங்காளியாகத் திகழ்ந்ததாலும் சிங்கப்பூர் செழித்தோங்கியது. ஆனால், சிங்கப்பூரின் வெற்றியை வடிவமைத்த சூழல்கள் தற்போது மாறிவிட்டன,” என்றார் அவர்.
புவிசார் அரசியல் சூழல், தொழில்நுட்ப முன்னேற்றம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றுடன் வேலையின் தன்மையும் மாறுகிறது என்று கூறிய அவர் பொருளியல் வளர்ச்சி இயல்பாகவே வேலைகளை உருவாக்கும் என்று கருத முடியாது என்றும் தெரிவித்தார்.
“இவை தற்காலிகமான தடைகள் அல்ல. உலகளாவிய செயல்பாட்டுச் சூழலில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்கள்,” என்றும் திரு கான் சுட்டினார்.
சிங்கப்பூர் உலகப் பொருளியலுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. அது வாய்ப்புகளை வழங்கும் வேளையில், நிலையற்ற தன்மைக்கும் வழிவகுக்கிறது என்று கூறிய அவர், இந்நிலையில்தான் பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்களின் பரிந்துரைகள் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
இப்புதிய மாற்றங்களுக்குச் சிங்கப்பூர் எவ்வாறு பதிலளிக்கவேண்டும் எனும் அடிப்படைக் கேள்விக்கு, சிங்கப்பூரின் மதிப்பை மெருகேற்றுவது, மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக்கொள்வது, போட்டித்திறனை ஊக்குவிக்கும் வேளையில், மீள்திறனைக் கட்டமைப்பது ஆகியவற்றை மூன்று முக்கிய உத்திகளாக இக்குழுக்கள் பரிந்துரைத்துள்ளதையும் திரு கான் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்களின் பரிந்துரைகள்
சிங்கப்பூரைச் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளில் முன்னோடியாகவும், செயற்கை நுண்ணறிவால் வலுவூட்டப்பட்ட பொருளியலாகவும் மாற்றப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளியல் பரிணமிக்கும்போது புறக்கணிக்கப்படாமல் இருக்க, புதிய, வளர்ந்து வரும் பரிவர்த்தனைகளைக் கைப்பற்றும் வகையில் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களைத் தொடங்கி, உலக அளவில் விரிவடைந்து, வெற்றிபெற ஆற்றல்மிக்க தொழில் சூழலமைப்பை வளர்க்க வேண்டும்.
இப்பரிந்துரைகளுடன், வேலை வாய்ப்புகள், ஊழியர் திறன் வளர்ச்சி, பொருளியல் மீள்திறன் கட்டமைப்பு ஆகியவற்றையும் குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.
அடிப்படையில் மாற்றம் கண்டுள்ள உலகில் தேவைப்படும் உத்திகளை அவை வகுத்துள்ளதாகக் கூறினார் மாநாட்டில் பங்கேற்ற போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்.
வணிகத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், ஊழியர் பங்களிப்புடன், ஒட்டுமொத்தப் பொருளியலின் கூட்டு முயற்சியின் முடிவில் இந்த அறிக்கை தொகுக்கப்பட்டதைச் சுட்டிய அவர், அறிக்கையின் பரிந்துரைகள் ஒருங்கிணைந்த உத்தியாகச் செயல்படுவதாகவும் சொன்னார்.
இந்தப் பரிந்துரைகளை வரவேற்பதாகக் கூறியுள்ள தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தனது பொருளியல் மாற்றத்தின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்துவைக்கும் நிலையில், சிறந்த வேலைவாய்ப்புகள், வலுவான முன்னேற்றப் பாதைகள், மேம்பட்ட தொழில் பாதுகாப்பு ஆகிய வடிவங்களில் ஊழியர்களை மையமாகக்கொண்டு அது தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

