சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள்

சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள்

2 mins read
6070c38e-65ca-4914-8d6c-f06fbff082d4
கடந்த ஆண்டு, இதுவரை இல்லாத உச்சமாகச் சாலை விபத்துகளில் 149 மரணங்கள் ஏற்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நேரும் சாலை விபத்துகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியும் என்று இரண்டாம் உள்துறை அமைச்சர் சிம் ஆன் கூறியுள்ளார்.

போக்குவரத்துப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது பேசிய சிம், “சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் மரணங்களும் குறைக்கப்படவேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, இதுவரை இல்லாத உச்சமாகச் சாலை விபத்துகளில் 149 மரணங்கள் ஏற்பட்டன. அதாவது இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதா, வேண்டுமென்றே மற்றவர்களுக்கு ஆபத்து விளைவித்து மரணத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கான புதிய குற்றப் பிரிவை அறிமுகம் செய்தது.

வேண்டுமென்றே மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வாகனவோட்டிகள், அதிகபட்சமாகத் தற்போது ஆபத்தான விதத்தில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்தையே எதிர்கொள்கின்றனர். அத்தகைய குற்றத்துக்கு அதிகபட்சம் எட்டு ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும்.

ஆனால், வேண்டுமென்றே அபாயகரமான வகையில் வாகனம் ஓட்டுவோருக்கான தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்று கருதப்படுகிறது.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் மோட்டார்சைக்கிளுடன் பந்தயத்தில் ஈடுபட்ட 30 வயது ஜெரட் டீ லோ கியட், அபாயகரமான வகையில் காரை ஓட்டி 18 வயதுப் பெண்ணின் மரணத்துக்குக் காரணமானதைச் சிம் சுட்டினார்.

அந்த வழக்கில் டீக்கு ஐந்து ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போதைய சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதற்கும் வேண்டுமென்றே அபாயகரமான வகையில் வாகனம் ஓட்டியதற்கும் தெளிவான வரையறை இல்லை என்று சிம் சுட்டினார்.

எனவே, பரிந்துரைக்கப்பட்ட புதிய குற்றப் பிரிவின்படி அபாயகரமான வகையில் வேண்டுமென்றே வாகனம் ஓட்டிய குற்றவாளிக்கு அதிகபட்சம் 15 ஆண்டுவரை சிறைத் தண்டனை, தேவை ஏற்பட்டால் பிரம்படி, அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.

குற்றஞ்சுமத்தப்பட்டவர்மீது வாகனம் ஓட்ட வாழ்நாள் தடையும் விதிக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட மசோதாவில் வாகனவோட்டிகளுக்கான மது அளவைக் குறைப்பதற்கான திருத்தமும் முன்வைக்கப்பட்டது.

ஓட்டுநரின் மூச்சுக்காற்றில் அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவை 100 மில்லிலிட்டருக்கு 35 மைக்ரோகிராமிலிருந்து 15 மைக்ரோகிராமுக்குக் குறைப்பதற்கான திருத்தம் மசோதாவில் இடம்பெற்றது.

அதேபோல, இரத்தத்தில் உள்ள மதுவின் அளவையும் 100 மில்லிலிட்டருக்கு 80 மில்லிகிராமிலிருந்து 30 மில்லிகிராமுக்குக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

புதிய விதிமுறையின்கீழ், வாகனம் நகர்ந்துகொண்டிருக்கும்போது கைப்பேசியைக் கையில் பிடித்திருப்பதே குற்றமாகக் கருதப்படும்.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துமரணம்மசோதாசட்டத் திருத்தம்