தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரலாறு காணாத மதிப்பில் சிங்கப்பூர் பூல்சில் $12.2 பி. பந்தயப்பிடிப்பு

2 mins read
13120782-94f5-46fe-ba40-8cf4b0cde9a0
சைனாடவுனில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கூடத்தில் காணப்பட்ட மக்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த நிதியாண்டில் சிங்கப்பூர் பூல்ஸ் அமைப்பிடம் வைக்கப்பட்ட பந்தயப்பிடிப்புகளின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 12.2 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது.

சிங்கப்பூர் பூல்சுக்கான கடந்த நிதியாண்டு இவ்வாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது.

இதற்கு முன்பு இவ்வளவு அதிக மதிப்பிலான பந்தயப்பிடிப்புகள் சிங்கப்பூர் பூல்ஸ் கையாண்டதில்லை என்று அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். சிங்கப்பூர் பூல்ஸ், சிங்கப்பூரில் சட்டபூர்வமாக செயல்படும் ஒரே லாட்டரி, பந்தயப்பிடிப்பு அமைப்பாகும்.

இதற்கு முந்தைய நிதியாண்டில் சிங்கப்பூர் பூல்சிடம் வைக்கப்பட்ட பந்தயப்பிடிப்புகளின் மதிப்பு 11.4 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது. கடந்த நிதியாண்டில் பதிவான தொகை, அதைவிட ஏழு விழுக்காடு அதிகமாகும்.

2019/2020 நிதியாண்டிலிருந்து சிங்கப்பூர் பூல்ஸ் ஆண்டுதோறும் சராசரியாக 8.3 விழுக்காடு வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்று அதன் பேச்சாளர் குளிப்பிட்டார்.

“விளையாட்டுப் பந்தயப்பிடிப்பின் வளர்ச்சியும் அதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வமும் வளர்ச்சிக்குக் காரணம். கடந்த சில ஆண்டுகளில் முக்கிய விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் அதிகரித்திருப்பதும் காரணம்,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

சென்ற நிதியாண்டுக்கான சிங்கப்பூர் பூல்சின் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று வெளியிடப்பட்டது. 4டி, டோட்டோ, ‘சிங்கப்பூர் ஸ்வீப்’, குதிரைப் பந்தயம் ஆகியவற்றில் இடம்பெற்ற பந்தயப்பிடிப்புகளின் மூலம் வருவாய் சேர்ந்தது அந்த அறிக்கையில் தெரியவந்தது.

ஒவ்வொரு நடவடிக்கையிலும் எவ்வளவு தொகை பந்தயப்பிடிப்புக்காக செலவிடப்பட்டது என்பது குறித்த விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

சிங்கப்பூர் பூல்ஸ், நிதி அமைச்சின்கீழ் உள்ள அரசாங்க சார்பு அமைப்பான பந்தயப்பிடிப்புக் கழகம் (Tote Board) நடத்தும் அமைப்பாகும். சூதாட்டத்துக்கு செலவான பிறகு மிஞ்சும் தொகையைப் பந்தயப்பிடிப்புக் கழகம் பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வகைசெய்யும்.

கடந்த நிதியாண்டில் சிங்கப்பூர் பூல்ஸ் அரசாங்கத்துக்கு அளித்த நிதியின் அளவும் வரலாறு காணாத அளவில் பதிவானது என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார். பந்தயப்பிடிப்பு தொடர்பான வரிகள், பந்தயப்பிடிப்புக் கழகத்திடம் வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டவை அத்தொகையில் அடங்கும்.

கடந்த நிதியாண்டில் சிங்கப்பூர் பூல்ஸ், பந்தயப்பிடிப்புக் கழகத்திடம் 437 மில்லியன் வெள்ளி வழங்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர்வாசிகளில் 40 விழுக்காட்டினர் ஆண்டுக்கு ஒருமுறையாவது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2023ஆம் ஆண்டு 3,000க்கும் அதிகமானோரைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வில் தெரிய வந்தது. அந்த விகிதம் 2020ஆம் ஆண்டு சூதாட்டப் பிரச்சினைக்கான தேசிய மன்றம் (NCPG) நடத்திய கருத்தாய்வில் பதிவான 44 விழுக்காட்டைவிடக் குறைவாகும்.

குறிப்புச் சொற்கள்