சிங்கப்பூரில் சொத்து முகவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அந்தப் போக்கு தொடர்வதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி 36,058 சொத்து முகவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில் அந்த எண்ணிக்கை 35,251ஆகப் பதிவானது. சொத்து முகவர் மன்றத்தின் (CEA) ஆக அண்மைய புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்து முகவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி பதிவான சொத்து முகவர் எண்ணிக்கை அதற்கு முன்பு இல்லாத அளவில் அதிகமாக இருந்தது.
சொத்து முகவர்த் துறையை மேலும் நிபுணத்துவம் அடையச் செய்யும் நோக்கில் சொத்து முகவர்கள் பதிவு செய்யப்படுவதைக் கட்டாயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அரசாங்க சார்பு நிறுவனமான சொத்து முகவர் மன்றம் எடுத்தது.
சொத்து முகவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும் சொத்து முகவர் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் உரிமம் பெற்ற அத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கை 1,046ஆகப் பதிவானது. முந்தைய ஆண்டு பதிவான 1,090ஐக் காட்டிலும் அது குறைவு. கடந்த 2023ல் அந்த எண்ணிக்கை 1,118ஆக இருந்தது.
பிராப்னெக்ஸ், தொடர்ந்து சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து முகவர் நிறுவனமாக விளங்குகிறது. அதில் 12,636 முகவர்கள் வேலை செய்கின்றனர். அதற்கு அடுத்த நிலையில் ஈஆர்ஏ உள்ளது. அதில் 8,648 முகவர்கள் பணியாற்றுகின்றனர்.

