ஒரே இடத்தில் குப்பை பொறுக்க சாதனை அளவாக கிட்டத்தட்ட 4,400 பேர் மே 13 எஃப்1 பிட் கட்டடத்தில் திரண்டனர்.
பொதுச் சுகாதார மன்றத்தின் 'எஸ்ஜி தூய்மை தினம்' திட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற நிகழ்வில் அரசாங்க அமைப்புகள், லாப நோக்கமற்ற அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 4,383 தொண்டூழியர்கள் குப்பை பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்கு முந்தைய சாதனை 2015ல் நிகழ்த்தப்பட்டது. அப்போதைய சுற்றுப்புற, நீர்வள அமைச்சைச் சேர்ந்த 1,798 ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஹோங் லிம் பூங்காவில் திரண்டனர். பின்னர் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சாக அந்த அமைச்சு பெயர் மாற்றம் கண்டது.
2021ல் தொடங்கப்பட்ட 'எஸ்ஜி தூய்மை தினம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, அன்றைய தினம் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை பொதுப் பூங்காக்கள், பூந்தோட்டங்கள், பூங்கா இணைப்புகள், திறந்தவெளி இடங்கள், வீடமைப்புப் பேட்டைகளின் தரைத் தளங்களைப் பெருக்கும் பணி இடம்பெறவில்லை.
துப்புரவாளர்கள் இல்லாமல் அந்த இடங்களில் குவியும் குப்பையின் அளவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவா, "சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருக்க உதவும் துப்புரவாளர்களுக்கு நன்றி கூற வேண்டும் என்ற செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்க நாங்கள் விரும்புகிறோம்," என்றார்.
உணவங்காடி நிலையங்களில் உணவருந்திவிட்டு தட்டுகளை அப்புறப்படுத்தாமல் விட்டுச்செல்வதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, "அவசர நிலை ஏற்படும்போதோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சிலரின் நடத்தையில் இன்னும் மாற்றம் காணப்படாதபோதோ கடுமையான நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமைகின்றன," என்று திருவாட்டி புவா கூறினார்.
'சுத்தமாக வைத்திருங்கள், சிங்கப்பூர்! இயக்கத்தின் இவ்வாண்டு நிகழ்வும் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. குப்பை போடும் பிரச்சினை, உயர்தர சுகாதாரத்தைக் கட்டிக்காப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங், "சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருந்து, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்ல.
"நல்ல குடிமக்களாக இருந்து அடுத்த தலைமுறைக்கு மேம்பட்ட சிங்கப்பூரை விட்டுச்செல்வது நமது இலக்காக இருக்க வேண்டும்," என்றார்.

