மத்திய சேமநிதியின் (மசே நிதி) ஓய்வுக்காலக் கணக்கு சேமிப்புத் தொகை 2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் $6.7 பில்லியனை எட்டியுள்ளது. 2024 முழு ஆண்டுக்கும் இத்தொகை $4.8 பில்லியனை ஆக இருந்தது.
இந்த ஆண்டில், 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய உறுப்பினர்களின் கணக்குகளில் பணம் அதிகம் நிரப்பப்பட்டதால் இது அதிகரித்துள்ளது என்று மத்திய சேமநிதிக் கழகம் புதன்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்தது.
குறிப்பாக, 2025 ஜனவரி மாதத்தில் 105,000 உறுப்பினர்களின் கணக்குகளில் $2.9 பில்லியன் நிரப்பப்பட்டது. இது 2024 ஜனவரியில் நிரப்பப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகம் என்று கழகம் தெரிவித்தது.
$2.9 பில்லியனில், $2.6 பில்லியனுக்கும் அதிகமான தொகை 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய 70,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கணக்குகளில் நிரப்பப்பட்டது.
2025ன் முதல் ஏழு மாதங்களில் சுயமாகவோ அல்லது அவர்களது அன்புக்குரியவர்களோ செலுத்திய சாதனை அளவான $6.7 பில்லியன் நிரப்புத்தொகை 316,000 மசே நிதி உறுப்பினர்களின் கணக்குகளுக்குச் சென்றதாகக் கழகம் குறிப்பிட்டது.
மசே நிதி உறுப்பினர்கள் தங்கள் ஓய்வுக்காலச் சேமிப்புகளை அதிகரிக்க, சுய அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் “சிறப்பு அல்லது ஓய்வுக்காலக் கணக்குகளுக்கு ரொக்கமாக அல்லது தங்கள் மசே நிதிக் கணக்கிலிருந்து தொகையைச் செலுத்தலாம். 55 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சிறப்புக் கணக்கிலும் 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடையவர்களுக்கு ஓய்வுக்காலக் கணக்கிலும் அத்தொகை நிரப்பப்படும்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய உறுப்பினர்கள் தங்கள் ஓய்வுக்காலக் கணக்கில் அதிகமாகப் பணம் நிரப்பும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலக் கணக்கு (இஆர்எஸ்) அடிப்படைத் தொகை உயர்த்தப்பட்டதும், ஜனவரி பிற்பாதியில் 55 வயதைத் தாண்டியவர்களுக்கு சிறப்புக் கணக்கு மூடப்பட்டதும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று கழகம் சுட்டியது.
55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய உறுப்பினர்கள் 65 வயதிலிருந்து $3,100 முதல் $3,300 வரை மாதாந்தர வழங்குதொகை பெற, நடப்பு ஆண்டில் $426,000 வரை தங்கள் ஓய்வுக்காலக் கணக்கில் நிரப்பலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு ஜனவரி மாதமும் இஆர்எஸ் தொகை அளவு அதிகரிக்கிறது. எனவே மசே நிதி உறுப்பினர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதலாகப் பணம் நிரப்ப முடியும். மத்திய சேமநிதி இணையத்தளத்தின்படி, 2026க்கான இஆர்எஸ் $440,800; 2027க்கான இஆர்எஸ் $456,400.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களது அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் கணக்குகளில் பணம் நிரப்பும் மசே நிதி உறுப்பினர்கள், ஆண்டுக்கு $16,000வரை வரித் தள்ளுபடி பெறலாம்.