வெவ்வேறு வயதுடைய 370 குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து இருக்கை யோகாவில் சாதனை படைத்து சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்துள்ளனர்.
சிங்கப்பூரின் 60ஆவது ஆண்டு விழாவை ஒட்டி, அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, ஜூன் 21ஆம் தேதி அன்று தோ பாயோவிலிருக்கும் ஓர் கூடைப்பந்து மைதானம் இருக்கைகள் நிறைந்த யோகா கூடமாக உருமாறியது.
இதற்கு முன்பு பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர்பள்ளியைச் சேர்ந்த 215 பணியாளர்கள் இணைந்து உருவாக்கிய இருக்கை யோகா சாதனையைக் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து முறியடித்தனர்.
பெரும்பாலும் பீஷான் - தோ பாயோ வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கெடுத்தாலும், சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் வருகை தந்து ஏறத்தாழ 1 மணி நேரத்திற்கு இருக்கை யோகாவில் ஈடுபட்டனர்.
சமூக நல்வாழ்வை ஊக்குவிப்பதையும் யோகாவின் நன்மைகளை அனைத்து வயதினருக்கும் இனத்தவருக்கும் கொண்டு சேர்ப்பதையும் முக்கிய நோக்கங்களாக முன்னிறுத்தி, தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றமும் அதன் இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
பீஷான் - தோ பாயோ அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான திரு சீ ஹொங் டாட் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
அனைத்து வயதினரும் யோகாவில் ஈடுபட்டு அதன் நன்மைகளை அனுபவிக்கலாம் என்று சுட்டிய அவர், தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
“அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு வசதிகளைக் குடியிருப்பாளர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, முதியோருக்கு பல வசதிகள் இலவசம் என்பதால், இவற்றிலிருந்து முழுமையாகப் பயனடைந்து, சமூகத்தைத் துடிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமாக நடைமுறையில் இருக்கும் யோகாவிற்கு பதில், உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் பல முதியோருக்கு ஏற்றவாறு, எளிமையான இருக்கை யோகா தேர்ந்தெடுக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
“சிங்கப்பூர் சமுதாயம் மூப்படைந்து வருவதால், மூத்தோரின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் இப்படிப்பட்ட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார் தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் திரு பாலச்சந்தர், 57.
இந்தியச் சமூகம் பரவலாக ஈடுபடும் யோகாவை மற்ற இனத்தவரும் கற்றுக்கொண்டு, பல்லினச் சமுதாயமாக ஒன்றிணைந்து பயனடைவதை கண்டதில் அதீத மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
ஒருவரை ஒருவர் சந்திக்க இந்நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொண்டனர் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மூன்று சீனத் தோழிகள்.
“எங்கள் நட்பு 10 வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், பல மாதங்களாக நாங்கள் சந்திக்கவே இல்லை. இந்நிகழ்ச்சியின் மூலம் மற்ற இருவரை சந்தித்ததோடு, யோகா செய்த அனுபவத்தை ரசித்து, அதன் மூலம் பயனும் அடைந்தேன்,” என்றார் அத்தோழிகளில் ஒருவரான திருவாட்டி டெபி ஓ, 63.