டிசம்பர் 13ல் நிலவழி எல்லைகளில் வரலாறு காணாத அளவில் பயணிகள்

2 mins read
7bcbde41-73aa-4392-8636-dcdfaeda42f4
ஜோகூர் கடற்பாலம். - கோப்புப் படம்: சாவ்பாவ்

இம்மாதம் 13அம் தேதியன்று சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் நிலவழி எல்லைகளில் வரலாறு காணாத எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளை அதிகமான வாகனங்கள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) அறிக்கை மூலம் இத்தகவலை வெளியிட்டது.

டிசம்பர் 15லிருந்து 21ஆம் தேதிக்கு இடைப்பட்ட ஆண்டிறுதிப் பள்ளி விடுமுறை காலத்தின் முதல் வாரம் 3.4 மில்லியனுக்கும் அதிகமானோர் நிலவழி எல்லைகளில் பயணம் செய்ததாக ஆணையம் தெரிவித்தது.

அதோடு, டிசம்பர் 13ஆம் தேதி வரலாறு காணாத எண்ணிக்கையில் மக்கள் அவ்வழிகளில் பயணம் செய்தனர். அன்றைய தினம் 553,000க்கும் அதிகமானோர் நிலவழி எல்லைகளிளைக் கடந்தனர். ஒரு நாளில் இத்தனை பேர் நிலவழி எல்லைகளைக் கடந்தது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக செப்டம்பர் ஆறாம் தேதியன்று 543,000க்கும் அதிகமானோர் நிலவழி எல்லைகளைக் கடந்தனர். டிசம்பர் 13க்கு முன்பு அன்றைய தினம்தான் ஆக அதிகமான பயணிகள் நிலவழி எல்லைகளைக் கடந்த நாளாக இருந்தது.

டிசம்பர் 13ஆம் தேதியன்று வாகனங்களில் சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்றோர் உச்ச நேரத்தில் சோதனைச்சாவடிகளைக் கடக்க மூன்று மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

“கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு பயணிகளுக்குத் தெரியப்படுத்துகிறோம். குறிப்பாக வார இறுதி நாள்களுக்கு இது பொருந்தும்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.

“மாற்று ஏற்பாடாக பயணிகள் எல்லைகளைக் கடக்கும் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்,” என்றும் ஆணையம் அறிவுரை வழங்கியது.

பயணம் மேற்கொள்வதற்கு முன்பு நிலவழி எல்லைகளில் போக்குவரத்து நிலவரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுமாறும் பயணிகளை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்