2025ல் சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளைச் சாதனை அளவில் 245 மில்லியன் பயணிகள் கடந்தனர்: ஐசிஏ

2025ல் சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளைச் சாதனை அளவில் 245 மில்லியன் பயணிகள் கடந்தனர்: ஐசிஏ

2 mins read
79f70184-cf5a-44a5-9261-54b52a88b60e
2025ல், தங்கள் கடப்பிதழ்களைக் காண்பிக்கத் தேவையின்றி, கிட்டத்தட்ட 127 மில்லியன் பயணிகள் குடிநுழைவைக் கடந்துசென்றதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கூறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சோதனைச்சாவடிகளை, கடந்த 2025ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 245 மில்லியன் பயணிகள் கடந்துசென்றனர்.

அந்த எண்ணிக்கை, அதற்கு முந்திய ஆண்டில் பதிவான 230 மில்லியனை விடவும் கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் பதிவான 217.3 மில்லியனை விடவும் அதிகம்.

நான்கு பயணிகளில் மூவர், நிலச் சோதனைச்சாவடிகள்வழி சிங்கப்பூருக்குள் நுழைந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) கூறியது.

ஒரே நாளில் பயணிகளின் ஆக அதிக எண்ணிக்கை, 2025 டிசம்பர் 19ஆம் தேதி பதிவானது. அந்நாளில் நிலச் சோதனைச்சாவடி வழியாகக் கிட்டத்தட்ட 589,000 பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.

கடந்த 2025ஆம் ஆண்டில், நிலச் சோதனைச்சாவடிகளில் கூடுதலாக 9.5 விழுக்காட்டு வாகனங்கள் குடிநுழைவைக் கடந்துசென்றன.

தான் அறிமுகப்படுத்திய திட்டங்களால் சோதனைச்சாவடிகளிலிருந்து மேலும் விரைவில், மேலும் சிறந்த முறையில் பயணிகள் கடப்பிதழின்றி குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற முடிவதாக ஆணையம் கூறியது.

மேலும், பயணிகளுக்கு அது சுமுகமாக அமைந்துள்ளதாகவும் அது சொன்னது.

சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு ‘ஆர்டிஎஸ்’ சேவையைப் பயன்படுத்திச் செல்ல விரும்பும் பயணிகள் அநேகமாக விரைவுத் தகவல் (கியூஆர்) குறியீட்டு முறையைப் பயன்படுத்தி குடிநுழைவைக் கடந்துசெல்வர் என்றும் ஆணையம் தெரிவித்தது.

ஒவ்வொரு திசையிலும் மணிக்கு 10,000 பயணிகள்வரை கொண்டுசெல்லவிருக்கும் ஆர்டிஎஸ் லிங்க், இவ்வாண்டின் இறுதியில் செயல்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலச் சோதனைச்சாவடிகளில் விரைவுத் தகவல் குறியீட்டைப் பயன்படுத்திக் குடிநுழைவைக் கடந்துசெல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதற்கிடையே, விரைவுத் தகவல் குறியீட்டு முறை கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடப்புக்கு வந்ததிலிருந்து துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகளில் கிட்டத்தட்ட 134 மில்லியன் பயணிகள் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

சென்ற ஆண்டு டிசம்பருக்குள் விரைவுத் தகவல் குறியீட்டு முறையை 60 விழுக்காட்டுப் பேருந்துப் பயணிகள் பயன்படுத்தியதை ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் காட்டின.

மோட்டார்சைக்கிளோட்டிகளும் தொடர்ந்து அந்த முறையைக் கடைப்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்