தியோங் பாரு பகுதியில் உள்ள தாமான் ஹோ சுவீ பகுதியில் மூவறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்று ஆகஸ்ட் மாதம் $8,000 வாடகைக்கு விடப்பட்டது. ஆக அதிக வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடு என்ற சாதனையை அது படைத்துள்ளது.
இது வீவகவின் சந்தை வாடகை தகவல் தள தரவுகளில் இவ்விவரம் உள்ளது. இந்தத் தரவுகள், வீட்டு உரிமையாளர்களின் வாடகை விண்ணப்பங்களில் உள்ள உறுதிகூறலை அடிப்படையாகக் கொண்டவை என்று அதன் இணையத்தளம் குறித்து கூறியது.
தாமான் ஹோ சுவீயில் உள்ள வீவக அடுக்குமாடி வீடுகள், 54 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டவை. இன்னும் 45 ஆண்டுகால குத்தகைக் காலம் பாக்கி இருப்பதாக சட்டப் பத்திர தரவுகள் காட்டுகின்றன.
ரிவர் வேலி பகுதியில் உள்ள ஹேவ்லாக் எம்ஆர்டி நிலையம், கிரேட் வேர்ல்ட் சிட்டி கடைத்தொகுதி ஆகியவை நடை தூரத்தில் இருப்பதால் வாடகைதாரர் அந்த வீட்டுக்கு அதிக வாடகை கொடுத்திருக்கலாம் என்று ஆரஞ்சுடீ குழுமத்தின் முதன்மை ஆய்வாளரான கிறிஸ்டீன் சன் கூறினார்.
அது மிகவும் விரும்பத்தக்க இடம், ஆர்ச்சர்ட் சாலை, மத்திய வர்த்தக வட்டாரம் போன்ற இடங்களுக்கு மிக அருகில் உள்ளது என்று அவர் கூறினார்.
அந்த வீடு, மற்றொரு மூவறை வீட்டுடன் இணைக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அது மற்ற மூவறை வீடுகளைவிட பெரியதாக இருக்கும் என்று சன் கூறினார். வீவக மாற்றி அமைத்தல் திட்டத்தின் கீழ், திருமணமான தம்பதிகள் மற்றும் / அல்லது குடும்பங்கள் அருகிலுள்ள இரண்டு வீடுகளை வாங்கி, அவற்றை ஒரே வீடாக மாற்றலாம். மேலும் அது வீட்டின் முகவையின் மதிப்பீட்டைப் பொறுத்தது.
அதேவேளையில், வீவக மறுவிற்பனை விலை வலுவான ஏற்றம் கண்டுள்ளன. இரண்டாவது காலாண்டில் மறுவிற்பனை விலை 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக வீவகவின் அண்மைய தரவுகள் காட்டுகின்றன. இது முதல் காலாண்டின் 1.8% உயர்விலிருந்து அதிகரித்துள்ளது. ஆண்டு அடிப்படையில் விலை 6.6 விழுக்காடு உயர்ந்தது.
இதற்கிடையில், பரிவர்த்தனை அளவு இரண்டாம் காலாண்டில் 4 விழுக்காடு உயர்ந்தது. இது ஆண்டு அடிப்படையில் 12.9 விழுக்காடு அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
வீவக வாடகையும் அண்மைய மாதங்களில் தனியார் சந்தையைவிட அதிகமாக உள்ளது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து, தரைவீடு அல்லாத தனியார் வீடுகளுக்கான சராசரி வாடகை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 1.2 விழுக்காடு உயர்ந்தது.
ஒப்பீட்டளவில், எஸ்ஆர்எக்ஸ் வாடகைக் குறியீட்டின் அடிப்படையில், அதே காலகட்டத்தில் வீவக வாடகை 3.1 விழுக்காடு உயர்ந்தது.
பொதுவாக, வீவக வீடுகளுக்கு அதிக வாடகை கொடுக்கும் குத்தகைதாரர்களின் எண்ணிக்கை 2024ல் குறைந்ததாக திருவாட்டி சன் கூறினார்.
இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் கிட்டத்தட்ட 678 வீடுகள் குறைந்தது $4,500 மாத வாடகைக்கு விடப்பட்டன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிககி 823 வீடுகளாக இருந்தது.
அதே காலகட்டத்தில், குறைந்தது மாதம் $5,000 வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 228இலிருந்து 152 ஆகக் குறைந்தது என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் எஸ்ஆர்எக்ஸ், 99.co வெளியிட்ட முன்னோட்ட மதிப்பீடுகளின்படி. வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை 2,993இலிருந்து 2,626 ஆகக் குறைந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தை எட்டிய வீடுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இது, கிடைக்கக்கூடிய வாடகை வீடுகளின் எண்ணிக்கை குறைய காரணம் என்று திருவாட்டி சன் கூறினார்.
எனவே, வாடகை எண்ணிக்கை கடந்த ஆண்டு 39,138 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 36,500 முதல் 38,000 ஆக குறையும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
வாடகை இந்த ஆண்டு 2 முதல் 3 விழுக்காடு வரை உயரக்கூடும். இது, 2023ஆம் ஆண்டில் காணப்பட்ட 10.2% வளர்ச்சியைவிட கணிசமாக மெதுவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

