‘லாவ் ஹுவோ டாங்’ குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிடம் நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் முயற்சியில் இரு கடன் மீட்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
‘எஃப்டிஆர் சர்விசஸ்’, ‘ஏஎஸ்கே டெப்ட் ரெக்கவரி’ ஆகிய இரு நிறுவனங்கள் இக்கடன்மீட்பு முயற்சிகளைத் தனித்தனியாக முன்னெடுத்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 12) அந்நிறுவனத்துடன் தொடர்புடைய வணிகங்களிடமிருந்து செலுத்தப்படாத கடன்களை வசூலிக்க கடன் வசூலிப்பாளர்கள் சென்றபோது, பிடோக் ரிசர்வாயர் சாலையில் உள்ள ஒரு உணவுக்கடை அவர்களின் கவனத்திற்கு உள்ளானது.
குழுமத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தாமஸ் ஹோங், கடன் வசூலிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக கவனத்துக்குள்ளாக்கப்பட்ட லெ சின் மிக்ஸ்டு ரைஸ் உட்பட பல உணவு, பான வணிகங்களில் இயக்குநர் பதவிகளை வகித்துள்ளார்.
நவம்பர் 12ஆம் தேதியன்று அக்கடையில் ஒரு முதியவரைக் கடன் வசூலிப்பாளர்கள் சந்தித்தனர். அவர் ஹோங்கின் தந்தை என நம்பப்படுகிறது.
கடனை வசூலிப்பதற்கான தங்களது முயற்சிகளுக்கு உதவ அந்த முதியவர் மறுத்துவிட்டதாகவும், காவல்துறையைத் தொடர்பு கொள்ளப் போவதாகக் கூறியதாகவும் அந்த வணிகக் கடன் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கடன் வசூலிப்பாளர்கள் அந்த இடத்தில் ஒரு அறிவிப்பை வைத்துவிட்டுச் சென்றனர்.
‘எஃப்டிஆர்’ நிறுவனம் 550,000 வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையையும், ‘ஏஎஸ்கே டெப்ட் ரெக்கவரி’ நிறுவனம் கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களைக் கையாள்வதாகவும் தெரிய வந்தது.
இரு முகமைகளும் வசூலிக்க முயற்சிக்கும் தொகைகளில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதா என்பது தெரியவில்லை.
கடன் வசூலிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள இந்த தொகை குறித்து ஹோங் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், செலுத்தப்படாத கடன்களை வசூலிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளில் அவர் முக்கியமானவராக மாறியுள்ளார்.
ஹோங்குடன் தொடர்புடையதாக நம்பப்படும் பல்வேறு நிறுவனங்களின்கீழ் இயங்கும் உணவகங்கள், உணவுக் கடைகளுக்கு காய்கறிகள், இறைச்சி, உள்ளிட்ட பிற உணவுப் பொருள்களை வழங்கியோரின் கோரிக்கைகளைத் தாங்கள் கையாள்வதாக ‘எஃப்டிஆர்’ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ‘லாவ் ஹுவோ டாங்’ குழுமத்துடன் தொடர்புடைய வணிகங்களின் பல விநியோகிப்பாளர்கள், கடன் கொடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட கடன்களைத் தாங்கள் கையாள்வதாக ‘ஏஎஸ்கே’ நிறுவனம் தனியாகத் தெரிவித்தது.
கடன்களை மீட்பதற்கான தங்களது முயற்சிகள் சவாலாக இருந்ததாக இரு முகமைகளும் தெரிவித்தன.
