கம்போடியக் காவல்துறை, ஓசிபிசி வங்கியுடன் இணைந்து செயல்பட்ட சிங்கப்பூர்க் காவல்துறை, மோசடி கும்பலிடம் ஏமாந்து வெளிநாட்டுக் கணக்கிற்குப் பணப் பரிமாற்றம் செய்த சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் 12.8 மில்லியன் அமெரிக்க டாலரை (S$16.4 மில்லியன்) முழுமையாக மீட்டுள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஒன்று, தனது வர்த்தகப் பங்காளியின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் கூடிய அங்கீகாரக் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 13ஆம் தேதி கம்போடியாவில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குப் பணத்தை அனுப்பியதாக வியாழக்கிழமையன்று (அக்டோபர் 29) சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அக்டோபர் 1ஆம் தேதி, புதிய வங்கிக் கணக்கிற்குப் பணத்தைச் செலுத்துமாறு வழிகாட்டல்களுடன் அந்த வர்த்தகப் பங்காளியின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து நிறுவனத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
தொடக்கத்தில் கட்டண ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதைச் சிங்கப்பூர் நிறுவனம் கண்டறிந்த போதிலும், பின்னர் வர்த்தகப் பங்காளியின் அங்கீகாரக் கடிதம் கிடைத்ததால் பணத்தை அனுப்பி வைத்தது. ஆனால், அந்த அங்கீகாரக் கடிதம் போலியானது என்பது பின்னரே தெரியவந்தது.
அக்டோபர் 26ஆம் தேதி, தங்களுக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்று சம்பந்தப்பட்ட வர்த்தகப் பங்காளி தெரிவித்த பின்னரே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் காவல்துறை உடனடியாக கம்போடியக் காவல்துறையுடன் தொடர்புகொண்டு, ஓசிபிசி வங்கியுடன் ஒருங்கிணைந்து துரித மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், மாற்றப்பட்ட முழுத் தொகையும் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது.
வர்த்தக மின்னஞ்சல் மோசடிகள் குறித்து வணிக நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பணம் செலுத்துவது தொடர்பான புதிய அல்லது திடீர் அறிவுறுத்தல் மாற்றங்கள் குறித்து, மின்னஞ்சலை மட்டுமே நம்பியிருக்காமல், நம்பகமான தொலைபேசி எண்கள் வாயிலாக விநியோகிப்பாளர்களுடனும் வர்த்தக பங்காளிகளுடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் தந்திரங்கள் குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலுவான கடவுச்சொற்கள், பல அடுக்கு அங்கீகார முறைகளைப் பராமரிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
