தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறுசுழற்சிப் பொருள்களைப் பிரித்து போடலாம்: நிபுணர்கள்

2 mins read
19e49b60-ac0f-4d13-ab1c-8a16c09103c6
மறுசுழற்சித் தொட்டிகளில் போடப்படும் கழிவுகளில் 40% மறுசுழற்சி செய்ய முடியாதவை. - வரைகலை: பிரசாந்தி
multi-img1 of 2

சிங்கப்பூரில் குறைவான மறுசுழற்சி விகிதத்துக்கு இடையே இன்னும் அதிகமான காகிதக் கழிவுகள் உருவாக்கப்படும் நிலையில், மறுசுழற்சியை அதிகரிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை துறை சார்ந்த நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

காகித மறுசுழற்சிக்கான கூடுதல் வழிகளை அரசாங்கம் ஆராய்வதாக ஜூலை 23ஆம் தேதி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.

அவற்றுள் ஆராயப்படும் வழிகளில் ஒன்று பயன்படுத்தப்பட்ட அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்க இரும்புக் கூண்டுகளை நிறுவுவது என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு சொன்னது.

அதுபற்றி கூடுதல் விவரங்கள் இல்லை என்றபோதும் அந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டால், அனைத்து மறுசுழற்சிப் பொருள்களையும் கழக புளோக்குகளுக்கு அருகே உள்ள நீல நிறத் தொட்டிகளில் போடும் வழக்கம் கைவிடப்படக்கூடும்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரின் உள்நாட்டு மறுசுழற்சி விகிதம் இதுவரை இல்லாத வகையில் ஆகக் குறைவாக 11 விழுக்காடு என்று பதிவானது.

2022ஆம் ஆண்டின் 12 விழுக்காட்டைவிட அது இன்னும் குறைவு. இருப்பினும் 2030ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு மறுசுழற்சி விகிதத்தை 30 விழுக்காடு வரை அதிகரிக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் மின்வணிகத்தால் காகிதக் கழிவு உற்பத்தி அதிகரித்து வரும் சூழலில் காகிதங்களையும் அட்டைப் பெட்டிகளையும் மறுசுழற்சி செய்ய கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன் 2019ஆம் ஆண்டு காகித, அட்டைப் பெட்டி கழிவுகள் 1,010 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு அது 1,273 டன்னுக்கு அதிகரித்தது.

அனைத்துக் கழிவுகளையும் ஒரே இடத்தில் போடும் கட்டமைப்பும் மறுசுழற்சி விகிதம் குறைந்ததற்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்கள் ஒன்றாகப் போடப்படும்போது மாசுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திரவம், உணவுக் கழிவுகள் ஆகியவையும் நீல நிறத் தொட்டிகளில் போடப்படுவதால் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்கள் மாசுபடுவதாக நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

பலரும் அத்தகைய நீல நிறத் தொட்டிகளைக் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தும் போக்கையும் அவர்கள் சுட்டினர்.

நீல நிற மறுசுழற்சித் தொட்டிகளில் போடப்படும் ஏறக்குறைய 40 விழுக்காட்டுப் பொருள்கள் மறுசுழற்சி செய்ய முடியாத நிலை இதற்குமுன் நிலவியது.

குறிப்புச் சொற்கள்
மறுபயனீடுபயன்படுத்திய பொருள்கள்சிங்கப்பூர்