தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வீடுகளில் மறுசுழற்சி விகிதம் 11%க்குக் குறைந்தது

2 mins read
0b9acc92-a18c-4b12-90e6-5b8231b2aa83
2023ல் 52 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதம் 2024ல் 50 விழுக்காட்டுக்குக் குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வீடுகளில் மறுசுழற்சி விகிதம் 2024ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 11 விழுக்காட்டுக்குக் குறைந்தது. முந்திய இரண்டு ஆண்டுகளில் (2023, 2022) இருந்த 12 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு.

வீடுகளில் பொருள்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் அனைத்து வீடுகளுக்கும் மறுசுழற்சிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

தாள்களையும் அட்டைகளையும் மறுசுழற்சி செய்வது வெகுவாகக் குறைந்ததே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

2024ஆம் ஆண்டுக்கான மறுசுழற்சி விகிதம் குறித்த விவரங்களை வாரியம் புதன்கிழமை (ஜூலை 23) வெளியிட்டது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதமும் அவற்றில் இடம்பெற்றுள்ளது.

அந்த விகிதம் 2024ல் 50 விழுக்காடாக இருந்தது. 2023ன் 52 விழுக்காட்டைவிட அது குறைவு. சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதம் 2014ல் 60 விழுக்காடாக இருந்தது.

வரைகலை:
வரைகலை: - பிரசாந்தி

வீடுகள், கடைவீடுகள், எரிபொருள் நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு இடங்கள் முதலியவற்றிலும் தொழில்துறை வளாகங்களிலும் உருவான கழிவுகள் குறைந்தன. ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதம் குறைந்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

கட்டடங்களை இடித்துவிட்டு மீண்டும் கட்டும் போக்கு கடந்த பத்தாண்டுகளில் குறைந்துள்ளது. அதனால் அவற்றிலிருந்து வெளியாகும் குப்பைகளும் குறைந்தன.

மரக்கழிவுகளும் குறைவாகவே இருந்தன.

தாள்களையும் அட்டைகளையும் மறுசுழற்சி செய்வது 2018ல் 52 விழுக்காடாக இருந்தது. சென்ற ஆண்டு அது 32 விழுக்காட்டுக்கு இறங்கியது. அவற்றிலிருந்து உருவான குப்பைகள் பெருகியதாக வாரியம் சுட்டியது.

சிங்கப்பூர் முழுதும் உருவான அத்தகைய குப்பைகளின் எடை 1.27 மில்லியன் டன்.

2014லிருந்து 2019 வரை குப்பைகள் குறைந்தன. ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றாலும் மின்வர்த்தகம் அதிகரித்ததாலும் நிலைமை மாறியது.

குறிப்புச் சொற்கள்