அதிபர் தர்மனுக்குப் பெல்ஜியத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு

2 mins read
3756dccf-312b-488d-8a92-875926dd9229
பெல்ஜியம் மன்னர் பிலிப்பையும் அரசி மட்டில்டாவையும் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் திருவாட்டி ஜேன் இத்தோகியும் சந்தித்துப் பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரசல்ஸ்: சிங்கப்பூரும் பெல்ஜியமும் நீண்டகால உறவை மறுவுறுதிப்படுத்திக்கொண்டதோடு கடல்துறை, புத்தாக்கம், நிலைத்தன்மை ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொண்டன.

பெல்ஜியத்துக்கு முதல் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் பெல்ஜியம் மன்னர் பிலிப்பையும் அரசி மட்டில்டாவையும் (மார்ச் 24) சந்தித்தார்.

அதிபர் தர்மனுக்கும் அவரது துணைவி திருவாட்டி ஜேன் இத்தோகிக்கும் அரச மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

சிங்கப்பூருக்கும் பெல்ஜியத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 59 ஆண்டுகள் நீடிக்கும் இருதரப்பு உறவை சிங்கப்பூரும் பெல்ஜியமும் பரைசாற்றின.

ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்ட அதிபர் தர்மன் பின் முதலாம் உலகப் போரில் உயிரிழந்த பெல்ஜியம் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் சடங்கில் கலந்துகொண்டார்.

அதையடுத்து பெல்ஜிய பிரதமர் பார்ட் டெ வீவரைச் சந்தித்த அதிபர் தர்மன், வட்டார ரீதியான, உலகளவிலான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

சிங்கப்பூரின் கடல்துறை, துறைமுக ஆணையத்துக்கும் பெல்ஜியத்தின் அண்ட்வெர்ப்-புருகெஸ் துறைமுகத்துக்கும் இடையில் வளர்ந்துவரும் ஒருங்கிணைப்பை இருநாட்டுத் தலைவர்களும் வரவேற்றனர்.

கடல்துறை மின்னிலக்கமாவதற்கும் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் அவர்கள் இருவரும் பாராட்டினர்.

அதிபர் தர்மன் பின் பெல்ஜியத்தின் மத்திய நாடாளுமன்றத்துக்குச் சென்று நாடாளுமன்ற நாயகர் பீட்டர் டெ ரூவரையும் செனட் சபைத் தலைவர் வின்சென்ட் புலொன்டெல்லையும் சந்தித்தார்.

பருவநிலை மாற்றம் போன்ற அனைத்துலக சவால்களை இன்னும் திறம்பட சமாளிப்பதற்கான பன்னாட்டு முயற்சிகளை சிங்கப்பூர், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் எந்தளவு முன்னெடுக்கவேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் கலந்துரையாடினர்.

பெல்ஜியத்தில் அடுத்த இரண்டு நாள்களில் அதிபர் தர்மன், ஐரோப்பாவின் இரண்டாம் ஆகப் பெரிய அன்ட்வார்ப்-புருகஸ் துறைமுகத்துக்குச் செல்லவிருக்கிறார்.

அங்குதான் சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு செயல்படும் அனைத்துலக துறைமுக நிறுவனமான பிஎஸ்ஏ அதன் ஆகப் பெரிய வெளிநாட்டுத் துறைமுகத்தைக் கொண்டிருந்தது.

இளையருக்கு அதிகாரம் வழங்குவதற்கும் சமூகத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் செயல்படும் லாப நோக்கமற்ற அமைப்புகளையும் திரு தர்மன் சந்திக்கவிருக்கிறார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெல்ஜிய வர்த்தகத் தலைவர்களையும் அவர் பார்க்கவிருக்கிறார்.

பெல்ஜியத்துக்கும் சிங்கப்பூருக்கும் 1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருதரப்பு உறவு நிறுவப்பட்டது.

அதிலிருந்து இரு நாட்டுக்கும் இடையே விரிவான வணிகமும் முதலீடுகளும் நடைபெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்