எதிர்க்கட்சியான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி (ஆர்டியு) வரும் பொதுத் தேர்தலில் வாழ்க்கைச் செலவினம் மற்றும் எம்.பி.க்களின் நியாயமான பிரதிநிதித்துவம் போன்ற முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று அதன் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலிமன் ஏப்ரல் 3ஆம் தேதி தெரிவித்தார்.
ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்தில் மக்களைச் சந்திப்பதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீ சூன் மற்றும் சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கு இவை முக்கியமானவை,” என்றார்.
வரும் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடுவதாக ஆர்டியு முன்னதாகத் தெரிவித்தது. அந்தக் குழுத்தொகுதியில் தமது கட்சியின் வேட்பாளர் அணிக்கு அவர் தலைமை ஏற்பாரா என்று கேட்டதற்கு, திரு. ஃபிலமன் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. ஆனால் அந்தப் பகுதியைப் பற்றி தனக்கு நன்கு தெரியும் என்று கூறினார்.
நீ சூன் தொகுதிக்கான ஆர்டியுவின் வேட்பாளர் அணியை அவர் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் டாக்டர் சையது ஆல்வி அகமது என்ற புதிய முகத்தை அவர் அறிமுகப்படுத்தினார். 57 வயது தனியார் பள்ளி ஆசிரியரான டாக்டர் சையது, ஆர்டியுவின் கொள்கைப் பிரிவு தலைவராகவும் அதன் மலாய் பிரிவுத் தலைவராகவும் உள்ளார்.
உணவுப் பொருள்களின் விலை, குழந்தைகளின் கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றுடன் குடும்பங்கள் போராடி வருவதைப் பற்றி தாம் கேள்விப்பட்டதாகவும் தமது கட்சி அதன் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்த ‘மிக முக்கியமான பிரச்சினை’ பற்றிப் பேசும் என்றும் திரு ஃபிலமன் கூறினார்.