முதிய பயணிகள் இருக்கைப் பகுதிக்குச் செல்ல படிகளில் ஏறுவதில் உள்ள சிரமத்தை சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து, 420 புதிய மின்சாரப் பேருந்துகளில் உள்ள படிகளின் உயரம் குறைக்கப்பட்டு வருகிறது.
முதியவர்கள், நடமாட சிரமப்படுவோரின் வசதிக்காக பிவொய்டி, ஸோங்தோங் நிறுவனங்களின் ஒற்றை அடுக்கு மின்சாரப் பேருந்துகளில் இருக்கைத் தளங்களுக்கு செல்லும் படிகளின் உயரத்தைக் குறைக்கும் பணி அக்டோபரில் தொடங்கியது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இந்தப் படிகள் 33 செ.மீ. உயரம் வரை இருக்கக்கூடும்.
இந்தப் படிகளின் உயரம் 23 செ.மீ. அல்லது அதற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்றும் இது ஈரடுக்குப் பேருந்துகளில் உள்ள படிக்கட்டுகளின் உயரத்தைப் போன்றது என்றும் அக்டோபர் 24ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஆணையம் கூறியது. இந்த மாற்றங்களுக்காக உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆணையம் செயல்பட்டு வருகிறது.
“இந்த ஏற்பாடு, வயதான பயணிகளும் நடமாட சிரமம் உள்ளவர்களும் இருக்கைகளுக்குச் செல்வதை எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும்,” என்று ஆணையம் கூறியது.
இந்த மாற்றங்களுக்கான மொத்த செலவு குறித்துக் கேட்கப்பட்டபோது ஆணையம் அதற்கான விவரங்களை வழங்கவில்லை.
தற்போது, இந்தப் பேருந்துகளில் 170 பேருந்துகள் சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் முதல் சில பேருந்துகள் 2024 டிசம்பரில் செயல்படத் தொடங்கின.
இந்தப் பேருந்துகள் பொதுவாக ஹவ்காங், செங்காங் வழியாகச் செல்லும் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. பேருந்துச் சேவை எண்கள் 80, 163, 371 உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
2024ல் ஆணையத்தால் கொள்முதல் செய்யப்பட்ட மொத்தம் 420 மின்சாரப் பேருந்துகள் இந்த மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் ஆண்டிறுதிக்குள் படிப்படியாக விநியோகிக்கப்பட உள்ளன.

