தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயீசா கான்: தோற்கடிக்கப்பட்டேன், துரோகம் இழைக்கப்பட்டேன்

3 mins read
497835c7-18bc-4079-af65-2b75dd0232b7
செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலையான பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சி நடத்திய கட்டொழுங்குச் சந்திப்பின்போது கட்சித் தலைவர்கள் தமக்கு எதிராகத் திரும்பியதாகவும் தம்மைக் குறைகூறுவதற்காக அத்தளத்தைப் பயன்படுத்தியதாகவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் தெரிவித்துள்ளார்.

மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்த நபர்களால் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் தனக்கு அவர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக உணர்வதாகவும் திருவாட்டி ரயீசா கூறினார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் பொய்யுரைத்ததன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் இரண்டாம் நாளன்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

பாட்டாளிக் கட்சியின் கட்டொழுங்குக் குழு உருவாக்கத்தைப் பற்றி 2021ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்னதாக அவருக்குத் தெரிந்திருந்ததா என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டபோது, “இல்லை,” என்று திருவாட்டி ரயீசா பதிலளித்தார்.

நவம்பர் 2ஆம் தேதியன்று பாட்டாளிக் கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம், திருவாட்டி ரயீசாவிற்கு அனுப்பிய மின்னஞ்சலை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார். நடந்த சம்பவத்தை அந்தக் கட்டொழுங்கு குழு விசாரிக்கும் என்ற அந்த மின்னஞ்சல் குறிப்பிட்டது.

“அந்த மின்னஞ்சல் எழுதப்பட்ட முறையும் இப்படி தீவிரமான ஒரு நடவடிக்கையை அவர்கள் எடுத்ததும் எனக்கு வியப்பளித்தது,” என்றும் திருவாட்டி ரயீசா சொன்னார்.

தமது குணாதிசயங்களைப் பற்றியும் நடத்தை பற்றியும் பாட்டாளிக் கட்சிக் குழு விவாதித்ததாக திருவாட்டி ரயீசா கூறினார்.

அவர் போதிய நாடாளுமன்றக் கேள்விகளை அனுப்பியதில்லை என்பதும் நாடாளுமன்றத்தில் அவர் இல்லை என்பதும் விவகாரங்களாகப் பேசப்பட்டன.

செங்காங் குழுத்தொகுதிக்கு திருவாட்டி ரயீசா போதிய எண்ணிக்கையில் நேரடியாகச் சென்றாரா என்றும் அந்தக் குழுவினர் கேட்டிருந்தனர்.

“அது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. நான் புதியவர் என்பதுடன், மூன்று மாதங்களுக்கு மகப்பேற்று விடுப்பிலும் இருந்தேன்,” என்று திருவாட்டி கான் கூறினார்.

அத்துடன், முக்கியமான வேறு நடப்புகள் நிகழாவிட்டால் தாம் எல்லா மக்கள் சந்திப்பு நேரங்களுக்கும் குடியிருப்புப் பகுதி நடைகளுக்கும் (estate walks) சென்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதற்குமுன், நாடாளுமன்றத்தில் தாம் கடமையாற்றிய விதம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

பாலியல் வதைக்கு ஆளானவர் பற்றி நாடாளுமன்றத்தில் தாம் கூறிய கதையைச் சான்றுகளோடு மெய்ப்பிக்கவேண்டும் என்று தம்மிடம் திரு சிங் 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று அனுப்பிய கடிதத்தில் கூறியதை அவர் அந்தக் குழுவிடம் கூறியதாக திருவாட்டி ரயீசா தெரிவித்தார்.

அத்துடன், தமது உரை ஏன் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டது என்று திருவாட்டி சில்வியா லிம் கேட்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.

தமது ஒழுங்கின்மை பற்றியும் கால தாமதம் பற்றியும் திரு சிங் தம்மிடம் பேசியதை திருவாட்டி ரயீசா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், கட்சி சந்திப்புகளின்போதும் தாம் போதிய அளவுக்குப் பேசுவதில்லை என்று சிங் தம்மிடம் கூறியதாக அவர் சொன்னார்.

“நான் அங்கு ஆக இளையவள் என பதிலளித்தேன். இத்தகைய சூழலில் இருப்பது முதன்முறை,” என்று கூறிய திருவாட்டி ரயீசா, இயன்றவரை கவனித்துக் கற்றுக்கொள்ள முற்பட்டதாகக் கூறினார்.

சந்திக்க மறுத்த பிரித்தம் சிங்

பாட்டாளிக் கட்சியின் கட்டொழுங்குக் குழுவினருடனான மற்றொரு சந்திப்புக்காக திருவாட்டி ரயீசா, திரு சிங்கிடம் வேண்டுகோள் விடுத்ததைக் காட்டிய ‘வாட்ஸ்அப்’ குறுஞ்செய்திகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர் படித்துக் காட்டினார்.

நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்களைப் பற்றி பேச அப்போது தயாராக இல்லை என்று திரு சிங்கிடம் கூறிய திருவாட்டி கான், அடுத்த சந்திப்பில் தமது நல்ல அனுபவங்களைப் பற்றிப் பகிர ஆசைப்படுவதாகக் கூறினார்.

ஆயினும், தனது நடத்தை ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பொருத்தமற்றதாக உள்ளது எனத் திரு சிங் கண்டித்ததாகவும் தனது வேண்டுகோளை மின்னஞசல் மூலம் அவர் அனுப்பச் சொன்னதாகவும் திருவாட்டி ரயீசா சுட்டினார்.

நவம்பர் 8ஆம் தேதி சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தாம் மதிப்பிடப்போவதை எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.

நவம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது கட்டொழுங்குச் சந்திப்பின்போது காம்பஸ்வேல் வட்டாரத்தில் தமது நேரடி வேலை அனுபவங்களைப் பற்றியும் அதில் தாம் அடைந்துள்ள வெற்றிகளைப் பற்றியும் திருவாட்டி ரயீசா விவரித்தார். ஆனால், அதற்கு அவர்கள் நல்லபடியாக பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

16 நாள்கள் நீடிக்கவுள்ள இந்த வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்போரில் திருவாட்டி ரயீசாவும் ஒருவர்.

குறிப்புச் சொற்கள்