மாற்றாந்தாய் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த இளையர்

2 mins read
dbb66e42-a2cf-4d94-a29a-4ebe7118c3f2
படம்: - Pixabay - qimono

மாற்றாந்தாய் மகளான ஏழு வயதுச் சிறுமியை ஆறு சம்பவங்களில் பாலியல் வன்கொடுமை செய்த பதின்ம வயது இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தனது 15வது வயதில் இளையர் அந்தக் குற்றங்களைச் செய்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை, மானபங்கக் குற்றச்சாட்டுகளை இளையர் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஜூலை 22ஆம் தேதி, குறைந்தது ஆறு மாதங்கள் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. தண்டனை விதிக்கும்போது மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்த பிறகு அவளது தாயார் 2019 பிப்ரவரியில் இளையரின் தந்தையை மணந்தார். அந்த ஆண்டு ஜூன் முதல், வாரயிறுதியிலும் பள்ளி விடுமுறையின்போதும் இளையர் உட்லண்ட்சில் உள்ள சிறுமியின் வீட்டில் தங்கிவந்தார். வாரநாள்களில் தன் தாயாருடன் அங் மோ கியோவில் அவர் தங்கினார்.

2020ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து பல்வேறு சம்பவங்களில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன் அதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று இளையர் மிரட்டியதாகக் கூறப்பட்டது.

2021ஆம் ஆண்டு மத்தியில் இளையரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து அவரையும் மற்ற வளர்ப்புப் பிள்ளைகளையும் உட்லண்ட்ஸ் வீட்டிலிருந்து வெளியேறி தங்கள் தாயாரிடம் செல்லும்படி சிறுமியின் தாயார் கூறினார்.

2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 10 மணியளவில் சிறுமி, தன் சொந்த சகோதரனிடம் இளையரின் நடத்தை குறித்துக் கூறியதுடன் இனி தனக்குப் பயமில்லை என்று கண்ணீருடன் சொல்லவே, விவரமறிந்த தாயார் மறுநாள் காவல்துறையிடம் புகாரளித்ததாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு தற்போது 19 வயதாகும் அந்த இளையரின் மேல்விவரங்களை வெளியிட அனுமதியில்லை.

குறிப்புச் சொற்கள்