சமூகச் சேவையாளர்களை ஊக்குவித்து, வலுவான தலைமைத்துவத்தை வளர்க்கும் தொழில்முறைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தார்.
சிறந்த சமூகச் சேவை விருதுகள் நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஸுல்கர்னைன், திறமையான சமூகச் சேவைத் தலைவர்கள், அவர்களின் குழுவினருக்கு உறுதியான ஆதரவு கொடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மதிப்புடன் நடத்தப்படுகிறோம் என்ற உணர்வையும் குழுவினருக்கு அவர்கள் ஏற்படுத்துவதாகத் திரு ஸுல்கர்னைன் சொன்னார்.
இது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பயனீட்டாளர்களின் சமூக முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் அமைப்புகள் எல்லைதாண்டி தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான குழுவினரின் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கச் செய்யத் துணைபுரிகிறது என்றார் அவர்.
கூட்டுப் பொறுப்பு, பகிரப்பட்ட உரிமையை உள்ளடக்கிய ‘நாம் முதல்’ என்ற உணர்வுடன் சவால்களை அணுகி, சிங்கப்பூரைக் குடும்பங்களுக்குச் சிறந்த இடமாக மாற்றுவதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் சமூகப் பணியாளர்கள் சங்கம் தனது ‘சிறந்த சமூகச் சேவை’ விருதை ‘சிறந்த சமூகச் சேவை’ விருதுகள் எனப் புதுப்பித்துள்ளது. இப்போது ‘செயல்முறை’, ‘செயல்முறை ஆய்வு’ ஆகிய இரு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
சமூகச் சேவைத் துறையின் பணிகள் குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் அதிகரிக்கும் நோக்கில், சமூகச் சேவை செயல்முறைகள், அதற்கான ஆய்வுகள் ஆகிய இரண்டையும் அங்கீகரிப்பதில் புதிய மாற்றம் கவனம் செலுத்துகிறது என்று சங்கத்தின் தலைவர் சான் வீ பெங் கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் கூறினார்.
“புதிய விருதுகளின் மூலம் இந்தத் துறை பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முறையையும் எங்கள் நடைமுறைகளுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் அறிவாற்றலையும் சிங்கப்பூரர்கள் மேலும் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
செயல்முறைப் பிரிவில் மூன்று அமைப்புகள் கௌரவிக்கப்பட்டன.
சமூகத்திலிருந்து தனித்திருக்கும் இளையர்களுக்கு ஆதரவளித்ததற்காக ஃபெய் யுவே சமூகச் சேவை அமைப்பு விருது பெற்றது.
இளையர்களைக் குற்றங்களுக்கு எதிரான தூதர்களாக அதிகாரமளிக்கும் ‘யூத் காப்’ திட்டத்திற்காக ஷைன் சிறுவர், இளையர் சேவை அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது.
மறதிநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்போருக்கும் ஆதரவளிக்கும் ‘ரீ2இக்னைட்’ திட்டத்திற்காக ரென் சி மருத்துவமனை கௌரவிக்கப்பட்டது.
செயல்முறை ஆய்வுப் பிரிவில், வளரிளம் பருவத்தின் முக்கியக் கட்டத்தை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்திய கேர் கார்னர் சிங்கப்பூர் அமைப்பு விருது பெற்றது.
குடும்ப வன்முறையால் கணவரிடமிருந்து பிரிந்த பிறகு பெண்களின் முடிவெடுக்கும் விதம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்காக கேர் கார்னர் சிங்கப்பூர், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி) ஆகியவை அங்கீகரிக்கப்பட்டன.
மறதிநோய்ப் பராமரிப்பு பெரும்பாலும் உடல் ரீதியான தேவைகளையே மையமாகக் கொண்டுள்ளதாலும் நோயாளிகள், பராமரிப்பாளர்களின் உளவியல், உணர்வுபூர்வமான தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும் தாங்கள் ‘ரீ2இக்னைட்’ திட்டத்தைத் தொடங்கியதாக ரென் சி மருத்துவமனையின் மூத்த மருத்துவச் சமூக சேவையாளர் சஹாரா கம்சானி குறிப்பிட்டார்.
“நாங்கள் கண்ட மிக அர்த்தமுள்ள மாற்றங்களில் ஒன்று, பங்கேற்பாளர்கள் ஒவ்வோர் அமர்வுக்காகவும் ஆவலுடன் காத்திருப்பது. அவர்களின் நினைவாற்றல் மங்கும்போதுகூட, அந்த மகிழ்ச்சியான, பாதுகாப்பான உணர்வு அப்படியே நிலைத்திருக்கிறது,” என்று மருத்துவச் சமூகச் சேவையாளர் சித்தி ஆயிஷா இஸ்மாயில் கூறினார்.

