சிங்கப்பூர் குடிமக்களின் கவலைகளைத் தீர்க்க மக்கள் செயல் கட்சி தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துவரும் நிலையில், வட்டார அளவிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) மாலை இடம்பெற்ற மக்கள் செயல் கட்சியின் (மசெக) பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதிப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. பிரசாரக் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர்.
அத்தொகுதியில் மசெக அணிக்குத் தலைமையேற்கும் அமைச்சர் இந்திராணி உரையாற்றினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் பாசிர் ரிஸ் வட்டாரத்திற்குப் புத்துயிரூட்டும் திட்டங்களை அவர் முன்வைத்தார். முதியோர் பலர் வசிக்கும் இந்த வட்டாரத்தில் துடிப்புடன் மூப்படைவதையும் நலவாழ்வு முறையையும் ஊக்குவிக்கத் தகுந்த சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
விலைவாசி உயர்வு, இளையர்களுக்கான வேலை வாய்ப்புகள், முதியவர்களுக்கு எதிரான பாகுபாடு போன்ற குடியிருப்பாளர்களின் கவலைகளை அறிந்துள்ளோம் என்றும் அவற்றைக் களைய திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் குமாரி இந்திராணி கூறினார்.
“அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உங்கள் வாக்கு எங்களுக்குத் தேவை,” என்று அவர் வாக்காளர்களிடம் கேட்டுகொண்டார்.
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதிக்கான மற்ற மூன்று மசெக வேட்பாளர்களான பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், திரு ஷாரில் தாஹா, திருவாட்டி வேலரி லீ ஆகியோரும் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினர்.
மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டானின் உரையின்போது கூட்டத்தினரிடையே பெரும் ஆரவாரம் எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒய்வுபெறும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மானும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினர்.
பாசிர் ரிஸ் தொகுதி குடியிருப்பாளர்களின் 28 ஆண்டு ஆதரவுக்கு நன்றி தெரிவித்த மூத்த அமைச்சர் டியோ, அவர்களை நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிநடத்தக்கூடிய வலுவான குழுவின் கையில் தொகுதியை விட்டுச்செல்வதால் தம்மால் அரசியலிலிருந்து நிம்மதியாக விலக முடிவதாகத் தெரிவித்தார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கை ஆதரிக்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுகொண்டார். சிங்கப்பூருக்கான அவரது தொலைநோக்குப் பார்வை அடுத்த ஐந்து ஆண்டுகளைத் தாண்டி நீண்டகால வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குறிவைத்துள்ளதாகவும் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இன்றைய நிச்சயமற்ற காலகட்டத்தில் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், முதலீடு செய்வதில் மக்கள் நிலைத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். நாம் அவர்களுக்கு அதை வழங்கினால், மற்ற நாடுகளைக் காட்டிலும் நமக்கு முன்னிலை கிடைக்கும்,” என்றார் அவர்.
சமயங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் மாலிக்கி, அதை அரசியலிலிருந்து பிரித்து வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
“சமயம் அல்லது இனத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்குகளைப் பெறும் முயற்சிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தும்,” என்ற அவர், நீதி, சமத்துவம், திறமைக்கு முன்னுரிமை தரும் அரசியலை மட்டுமே ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
“சிங்கப்பூர் மக்களின் குரலாக இருப்போம் என எதிர்க்கட்சியினர் கூறலாம். ஆனால், ஏற்கெனவே மக்களின் குரலாகவும், செயலில் இறங்கி மக்களுக்காகப் பணியாற்றும் கைகளாகவும் இத்தனை நாள்களாக மசெக இருந்து வருகின்றன,” என்றார் திரு மாலிக்கி.

