‘அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் 8.0’ சிங்கப்பூர் தகுதிச் சுற்றுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
மலேசியத் திரங்கானு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தச் சொற்போர் நிகழ்ச்சி, அனைத்துலகத் தமிழ் இளையர்களை ஒன்றிணைக்கும் தளமாகத் திகழ்கிறது.
அப்போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் பதிவுசெய்துகொள்வதற்கான இறுதி நாள் ஏப்ரல் 26.
இது குறித்த மேல்விவரங்களை https://www.instagram.com/tamilsorpor_umt?igsh=NWg2cXlyMjd6MXJt இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழை அறிவுசார் மொழியாக மேம்படுத்துவதும் தன்னம்பிக்கையுள்ள பேச்சாளர்களை உருவாக்குவதும் இந்நிகச்சியின் முக்கிய நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
இது குறித்து தமிழ் முரசிடம் பேசினார் ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளர் திருவாட்டி சத்யா.
‘‘சிங்கப்பூரில் நடைபெறும் தகுதிச் சுற்று, திறமையான இளம் விவாத வீரர்களை ஈர்க்கும் என நம்புகிறோம். இவ்விழா, கலாசாரச் செழுமை, மொழியாற்றல் உள்ள இளையர்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு 8ஆம் ஆண்டாக நடத்தப்படுகிறது,’’ என்றார் அவர்.
சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தகுதிச் சுற்றுகள் நடைபெறும். எனினும், இந்த ஆண்டு அந்தச் சொற்போரில் பங்குபெற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அந்த நாட்டு அணிகளுக்கான தகுதிச் சுற்று நடைபெறுமா என்பது பிறகு முடிவுசெய்யப்படும் என்றார் திருவாட்டி சத்யா.
தொடர்புடைய செய்திகள்
இது, இளம் தமிழ் பேச்சாளர்களுக்குக் கருத்துப் பரிமாற்றக் களமாகவும் பாரம்பரிய விழுமியங்கள், கல்விப் பரிமாற்றம், விவாதம், தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதற்கான ஒரு தளமாகவும் அமைகிறது.
சொற்போரைத் தவிர அனைத்துலகத் தமிழ் இளையோர் மாநாடும் நடைபெறவுள்ளது. ஆசியா, தெற்காசியா என அனைத்துலக நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பேச்சாளர்களும் பேராளர்களும் அதில் கலந்துகொள்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகத் திருவாட்டி சத்யா கூறினார்.

