தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
கடுமையாக்கப்படும் விதிமுறைகள் இவ்வாண்டின் நடுப்பகுதியிலிருந்து நடப்புக்கு வரும்.
புதிய மசோதாவின்கீழ், UL2272 தீ பாதுகாப்பு தரநிலைக்கு உட்படாத மின்ஸ்கூட்டர்களை வைத்திருக்க முடியாது.
தற்போதைய நிலவரப்படி, இவ்வகை மின்ஸ்கூட்டர்களை வீட்டில் வைத்திருக்க முடியும்.
நிலப் போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் மசோதாவின்கீழ் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இவற்றை வலியுறுத்தும் மசோதாவைத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் திங்கட்கிழமை (ஜனவரி 12) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டரைப் பதிவு செய்வது கட்டாயமாக்குவதும் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களில் அடங்கும். இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டரை வைத்திருப்பவர்கள் அதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. உடற்குறையில்லாதவர்களும் தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவது குறித்து அக்கறை எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டர்களின் உருவ அளவு மீது கட்டுபாடு விதிக்கவும் அவற்றின் வேக வரம்பை மணிக்கு 6 கிலோ மீட்டருக்குக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உருவ அளவில் அளவுக்கு அதிகமாக இருக்கும், அதிவேகமாகச் செல்லக்கூடிய தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டர்களால் நடைபாதைகளைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.
இது ஒரு புறம் இருக்க, சிங்கப்பூர் சாலைகளில் பயணம் செய்ய சிங்கப்பூரில் பதிவாகும் அனைத்து வாகனங்களிலும் சாலை மின்கட்டணம் 2.0 முறையின் ஓபியு பொருத்தப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மசோதா பரிந்துரை செய்துள்ளது.
சிங்கப்பூர் வாகனங்களில் ஓபியு பொருத்தப்படும் பணிகள் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் பதிவாகியுள்ள வாகனங்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான வாகனங்களில் ஓபியு பொருத்தப்பட்டுவிட்டதாக அமைச்சு கூறியது.
சாலை மின்கட்டணங்கள் செலுத்தப்படாவிடில் அவை நிர்வாக விவகாரங்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்துக் குற்றமாக வகைப்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சாலை மின்கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால் அவை செலுத்தப்படும் வரை நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் தொடர்புடைய சில பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. சாலை வரி புதுப்பித்தல் இதில் அடங்கும்.

