தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்மறை அரசியலைப் புறக்கணியுங்கள்: பிரதமர் வோங்

3 mins read
ea6cc012-abdf-4dc7-8925-d93b9e87afeb
ஒன் பொங்கோல் உணவங்காடி நிலையத்தில் குடியிருப்பாளர்களுடன் உரையாடிய பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

எதிர்மறை அரசியலை நிராகரிக்கும்படி பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொங்கோல் குழுத்தொகுதியில் போட்டியிடும் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கையும் அவரது தலைமையிலான மக்கள் செயல் கட்சி (மசெக) அணியையும் பாட்டாளிக் கட்சி விமர்சித்திருந்த நிலையில், பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொங்கோல் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்களுடன் ‘ஒன் பொங்கோல்’ உணவங்காடி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பிற்பகல் தொகுதி உலா மேற்கொண்ட பிரதமர் வோங் செய்தியாளர்களிடம் பேசினார்.

திரு கானுக்கு எதிராகவும் அவரது அணியினருக்கு எதிராகவும் பாட்டாளிக் கட்சி தொடர்ந்து முன்வைக்கும் எதிர்மறையான கருத்துகள் வருத்தமளிக்கிறது என்றும் அவை அலட்சியமாக முன்வைக்கப்படுவது ஏமாற்றமளிக்கிறது என்றும் திரு வோங் கூறினார்.

“நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில், குறிப்பாகச் சிங்கப்பூருக்காக மிகுந்த பங்களித்துள்ள துணைப் பிரதமர் கான் போன்ற ஒருவரை எதிர்மறையாகத் தாக்குவது தேவையற்றது,” என்றார் பிரதமர்.

ஓய்வு பெறும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனின் இடத்தை நிரப்ப திரு கான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், அவரது குறிப்பிடத்தக்க அனுபவமும் நிரூபிக்கப்பட்ட திறனும்தான் என்று திரு வோங் குறிப்பிட்டார்

மேலும், அவரின் திறமையை நன்கு அறிந்திருப்பதால்தான் அவரைத் துணைப் பிரதமராக நியமித்ததாகவும் அவர் சொன்னார்.

கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது திரு கானின் தலைமைத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் தலைவராகவும் சிங்கப்பூரின் பொருளியல் நிலைத்தன்மைக்கு அவர் ஆற்றிவரும் முக்கிய பங்கையும் எடுத்துரைத்தார்.

“பாட்டாளிக் கட்சியில் யாரால் இந்தப் பொறுப்புகளை ஏற்க முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“துணைப் பிரதமர் கான் போன்ற ஒருவரின் பங்களிப்பை எதிர்க்கட்சி இவ்வளவு எளிதாகப் புறக்கணிப்பது வியப்பளிக்கிறது. இது சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரம் குறித்த பொறுப்பற்ற அணுகுமுறையாகும்,” என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமன்றி, திரு ஹெங் சுவீ கியட்டைக் காட்டிலும் வயதானவரான திரு கான், பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே ஓய்வெடுக்கத் தயாராக இருந்ததாக திரு சிங் கூறியதற்குப் பதிலளித்த பிரதமர், இருவரையும் ஒப்பிடுவது தவறு என்றும், திரு ஹெங் உடல்நல பிரச்சினைகளாலும் மற்ற தனிப்பட்ட காரணங்களாலும் ஓய்வுபெறுகிறார் என்றும் தெளிவுபடுத்தினார்.

பொங்கோல் குழுத்தொகுதிக்கு துணைப் பிரதமர் கான் மாற்றப்படுவார் என்பதை பாட்டாளிக் கட்சி சற்றும் எதிர்பார்க்கவில்லை என்ற கருத்தை முன்வைத்த பிரதமர், அதனால்தான் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்றும் ஐயம் எழுப்பினார்.

“ஒருவேளை வேறு அமைச்சரையோ அல்லது புதுமுகத்தையோ இங்கு நாம் களமிறக்குவோம் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்,” என்றார் திரு வோங்.

மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி போட்டியிடாதது பற்றிக் கருத்துரைத்த அவர், “பாட்டாளிக் கட்சி முன்வரவில்லை, மாறாக அவர்கள் விலகிச் சென்றார்கள்,” என்றார்.

“அணிகளைப் பாருங்கள். வேட்பாளர்களை மதிப்பிடுங்கள். எந்த அணி உங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்து, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்,” என்று பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

முதல்முறையாக வாக்களிக்கும் இளையர்களைத் தமக்கும் தமது மசெக அணிக்கும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார். இளையர்களுக்கு கட்சியுடன் நெருக்கம் குறைவாக இருக்கலாம் என்பதை ஒத்துக்கொண்ட அவர், எதிர்க்கட்சியை ஆதரிக்க விரும்பும் அவர்களது மனநிலையைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகவும் சொன்னார்.

“எனக்கும் என் அணிக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்களுடன் இணைந்து பணியாற்ற, உங்கள் கனவுகளை நனவாக்க, சிங்கப்பூரை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்றார் பிரதமர்.

குறிப்புச் சொற்கள்