தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடையாள அட்டை எண் கசிவு விவகாரம்: 6 முக்கியக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன

3 mins read
90eb6aa5-a21e-4716-9f92-c28b73801b60
பொதுச் சேவைத் தலைவர் லியோ யிப் தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கையானது ஆறு முக்கியக் குறைபாடுகள் பட்டியலிட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

2024 டிசம்பர் மாதம் ‘பிஸ்ஃபைல்’ (Bizfile) இணைய வாசலில் அடையாள அட்டை எண்கள் மறைக்கப்படாமல் வெளியான விவகாரத்தை அரசாங்கம் ஆழ்ந்து ஆராய்ந்து, அதன் தொடர்பில் மார்ச் 3ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘அக்ரா’ எனப்படும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கும் ‘பிஸ்ஃபைல்’ இணையவாசலின் பொதுத்தேடல் செயல்பாட்டில் இந்த எண்கள் வெளியிடப்பட்டன.

இதன் தொடர்பில் அரசாங்கச் சேவைத் தலைவர் லியோ யிப் தலைமையிலான குழு வெளியிட்ட புதிய அறிக்கையில், ஆறு முக்கியக் குறைபாடுகள் பட்டியலிட்டுள்ளது.

முதலாவதாக, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஜூலை 2024ல் வெளியிட்ட சுற்றறிக்கையில், அதன் கொள்கைகளைப் பற்றி மேலும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்தச் சுற்றறிக்கை எவ்வாறு புதிய ‘பிஸ்ஃபைல்’ இணைய வாசலுடன் பொருந்தும் என்பதை ‘அக்ரா’ தவறாகப் புரிந்துகொண்டதை ‘அக்ரா’வும் அமைச்சும் உணரவில்லை.

இரண்டாவதாக, ‘அக்ரா’[Ϟ]வின் ஒருங்கிணைப்பில், குறிப்பாக மேற்கூறிய சுற்றறிக்கையில் இருந்த தகவல்களைப் பகிர்வதிலும் செயல்படுத்துவதிலும் குறைபாடுகள் தென்பட்டன..

அடுத்ததாக, பொதுப் பதிவகங்கள் போன்ற சிக்‌கலான தளங்களில் அடையாள அட்டை எண்களின் புதிய பயன்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் திட்டத்தில் அமைச்சு மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

நான்காவதாக, அதன் பொதுத்தேடல் செயல்பாட்டில் அடையாள அட்டை எண்களை முழுமையாகக் காட்ட முடிவு செய்ததற்குமுன், அந்த எண்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் அவற்றை எளிதில் அணுக முடியாததை உறுதிசெய்வதற்கும் இடையிலான சரியான சமநிலையை ‘அக்ரா’ மதிப்பிடவில்லை. இது தரவு மேலாண்மை குறித்த அரசாங்க விதிகளுக்கு முரணானது.

ஐந்தாவதாக, பொதுத்தேடல் செயல்பாட்டின் சில பாதுகாப்பு அம்சங்கள் போதுமான அளவு செயல்படுத்தப்படவில்லை.

இறுதியாக, புதிய ‘பிஸ்ஃபைல்’ இணைய வாசலைப் பற்றி சென்ற ஆண்டு டிசம்பர் 12ல் பொதுமக்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, அந்தச் சம்பவத்தை மேலும் சிறப்பாகக் கையாண்டிருக்க வேண்டும்.

இருப்பினும், வேண்டுமென்றே தவறு செய்தது அல்லது தெரிந்தே உரிய நடவடிக்கை எடுக்காமலிருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்‌கப்பட்டது.

அந்த விவகாரத்தை ஆய்வு செய்த குழு, தனது அறிக்கையை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனிடம் பிப்ரவரி 25ஆம் தேதி சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து, அவர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் பிப்ரவரி 26ஆம் தேதி அவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மூத்த அமைச்சர் டியோவுக்‌கும் ஆய்வுக் குழுவுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், அறிக்கையின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். இதன்வழி கற்றுக்கொண்ட பாடங்களை அரசாங்கம் மனத்தில்[Ϟ] கொண்டு, அதன் செயல்முறைகளை மேம்படுத்தி, மேலும் சிறப்பாகச் செயல்பட முயலும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘அக்‌ரா’, நிதியமைச்சு, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஆகியவை இதுபோன்ற சம்பவங்கள் நடை[Ϟ]பெறாமலிருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளன.

முக்கியமான தகவல்கள் சரியான முறையில் பகிரப்படுவதை உறுதிசெய்ய பணியாளர்களுக்கு வலுவான பயிற்சி அளிக்கப்படும் என்று அக்‌ரா தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கமான இடைவெளியில் கூடுதலான மறுஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவிருப்பதாகவும் சேவை வழங்குநர்கள் மீதான மேற்பார்வையை வலுப்படுத்தவுள்ளதாகவும் அது கூறியது.

அடையாள அட்டை எண்கள் குறித்த கொள்கையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அரசாங்க நிறுவனங்களுக்கு மேலும் வழிகாட்டுதல் வழங்கப்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு கூறியது. இதனுடன், அமைச்சின் செயல்பாடுகள் வலுப்படுத்தப்படும் என்றும் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்தல், பயன்படுத்துதல், வெளிப்படுத்துதல் தொடர்பாக அரசாங்கத்தின் தற்போதைய தரவு மேலாண்மைக் கொள்கைகளைத் தொடர்ந்து நிறுவனங்களுக்கு நினைவூட்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையைப் பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் (www.pmo.gov.sg) படிக்கலாம். மூத்த அமைச்சர் டியோ, புதிய கண்டுப்பிடிப்புகளைப் பற்றிய அமைச்சர்நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மார்ச் 6ஆம் தேதி வெளியிட்டுப் பேசவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்