1,180 தனியார் வீடுகளைக் கட்டுவதற்கான இரு நிலப்பரப்புகள் வெளியீடு

1,180 தனியார் வீடுகளைக் கட்டுவதற்கான இரு நிலப்பரப்புகள் வெளியீடு

எஸ்பிஎச் மீடியா

31 Oct 2026 - 4:54 pm

2 mins read

நகர மறுசீரமைப்பு ஆணையம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனை (ஜிஎல்எஸ்) ஒதுக்கீட்டுப் பட்டியலின்கீழ் இரண்டு குடியிருப்பு நிலப்பரப்புகளை வெளியிட்டுள்ளது. 

அதில் ஒன்று சுவான் குரோவ் பகுதியிலும் மற்றொன்று பிளைமவுத் அவென்யூ - டன்னர்ன் ரோடு வட்டாரத்திலுள்ள முன்னாள் ராஃபிள்ஸ் டவுன் கிளப்பிலும் உள்ளன. 

அந்த இரு நிலப்பரப்புகளிலும் கிட்டத்தட்ட 1,180 தனியார் வீடுகளைக் கட்டமுடியும்.

சுவான் குரோவ் தளத்தில் 930 வீடுகளையும் மற்றோர் இடத்தில் 250 வீடுகளையும் எழுப்பலாம். அந்த 250 வீடுகளின் முதல் தளம் வர்த்தகத்திற்கு ஒதுக்கப்படலாம்.

இருப்பினும், இவ்விரு தளங்களும் குறுகிய காலத்தில் ஏலத்திற்கு விடப்படும் என்று சந்தை கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கவில்லை. 

அவற்றில் வரவிருக்கும் வீடுகள் காரணமாக, மற்றொரு நிலக் கையகப்படுத்துதலில் ஈடுபடுவதற்கு முன் மேம்பாட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாளக்கூடும். 

சுவான் குரோவ் தளம் கிட்டத்தட்ட 341,170 சதுர அடி அல்லது 3.17 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 

இதன் அதிகபட்ச மொத்தத் தரைப்பரப்பளவு 852,932 சதுர அடியாகும். 

இது, 2025ஆம் ஆண்டு வழங்கப்பட்ட, அருகிலுள்ள இரண்டு அரசாங்க நில விற்பனைப் பட்டியலின் நிலப்பரப்புகளைவிடச் சற்றுப் பெரியது. 

அந்த இரண்டு நிலங்களின் கூட்டுப் பரப்பளவு கிட்டத்தட்ட மூன்று ஹெக்டர் ஆகும்.

முந்தைய அந்த நிலப்பரப்புகள் சிங் ஹோல்டிங்ஸ் மற்றும் சன்வே டெவலப்மென்ட்ஸ் (தற்போது சன்வே எம்சிஎல்) இடையிலான கூட்டு வர்த்தக நடவடிக்கையிடம் வழங்கப்பட்டன. 

அந்த இரண்டு நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து, 1,056 குடியிருப்புகளை உள்ளடக்கிய ‘ஒன் சுவான் குரோவ்’ என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பை உருவாக்க சொத்து மேம்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதன் கட்டுமானம் 2027 பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் இந்தத் திட்டம், அப்பகுதிக்குக் கணிசமான அளவில் புதிய வீடுகளைச் சேர்க்கும். 

குறிப்புச் சொற்கள்